அதிகரிக்கும் நாய் தொல்லை ஸ்ரீவி., மக்கள் அச்சம்
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் அதிகரித்து வரும் நாய் தொல்லையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகரில் 33 வார்டுகளுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு தெருவிலும் ஐந்து முதல் 10 நாய்கள் வரை சுற்றித் திரிகின்றன. இதில் ஒரு சில நாய்கள் நோய்வாய்ப்பட்டு காணப்படுவதால் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இதே போல் சுற்றுவட்டார கிராமங்களிலும் நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாவிட்டாலும், இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் மில் தொழிலாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள் வெளியூர் சென்று திரும்பும் வியாபாரிகளை நாய்கள் துரத்துகின்றன. பல்வேறு தெருக்களில் நாய் கடியால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நாய்களின் எண்ணிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.