பசுஞ்சோலையாய் ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற வளாகம்
இ ன்றைய மனித சமுதாயத்தின் பரபரப்பான வாழ்க்கை சூழலில் இயற்கையே ஆறுதல் தரும் அரு மருந்தாக விளங்குகிறது. அதிலும் இன்றைய நவீன அறிவியல் உலகில் உயரமான அழகான கட்டடங்கள் குளிர்சாதன வசதி பொருத்தப்பட்டிருந்தாலும் மரங்களின் நிழல்களில் இளைப்பாறுவதற்கே மனித மனங்கள் விரும்புகிறது. அதனால் தான் நமது முன்னோர் அதிகளவில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தனர். கல்வி அறிவு அதிகம் இல்லாத காலத்தில் கூட மரங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகளவில் இருந்தது. வீடுகளின் முன்பும், பின்பும் இருந்த மரங்கள் மனித சமுதாயத்திற்கு நிழலையும், மனதிற்கு மகிழ்ச்சியையும் தந்தது. பொது போக்கு வரத்து அதிகம் இல்லாமல் இருந்த காலத்தில் கூட மக்கள் இளைப்பாற வசதியாக ரோட்டில் இருபுறமும் வளர்க்கப்பட்ட மரங்கள் பரந்து விரிந்து நிழல் தரும் குடையாக விளங்கியது. ஆனால், மக்கள் தொகை அதிகரித்து அறிவியல் வளர்ச்சிகள், ரோடு வசதிகள் அதிகரித்த நிலையில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கிறோம் என அரசு தரப்பில் கூறினாலும் இன்று வரை, முன் காலத்தில் இருந்த அளவிற்கு மரங்களை ரோட்டோரங்களில் காண முடியவில்லை. மேலும் ஆண்டுதோறும் அதிகரிக்கும் குடியிருப்புகளால் நமது மண்ணின் பசுமை பரப்புகள் குறைந்து வருகிறது. மாசுக்கள் அதிகரித்து மனித சமுதாயம் நோய்களுக்கு ஆளாகும் நிலை உருவாகி வருகிறது. மரங்களின் எண்ணிக்கை குறைவதால் எதிர்கால மனித சமுதாயத்தின் நிலை என்னவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் மரங்கள் நிறைந்த பசுமைச் சோலையாய் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் திகழ்கிறது. நீதிமன்ற வளாகத்தின் நான்கு புறமும் கட்டடங்கள் இல்லாத காலியிடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மரக்கன்றுகள் இன்று பசுமை, குளுமை நிழல் தரும் மரங்களாக வளர்ந்துள்ளன. நீதிபதிகளின் நேரடி கண்காணிப்பில் தண்ணீர் ஊற்றி வளர்த்து பராமரிக்கும் அரும்பணியில் நீதிமன்ற ஊழியர்கள் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்லும் நிலையில் அவர்கள் இளைப்பாற வசதியாக இந்த மரங்களின் நிழல்கள் உதவுகிறது. இயற்கையாய் கிடைக்கும் தூய்மையான காற்று மனித சமுதாயத்தின் உயிர்காக்கும் ஜீவனாக விளங்குகிறது. இதேபோல் மாவட்டத்தின் அனைத்து நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிகளவில் மரக்கன்றுகள் வளர்த்து பசுமைச் சோலையாய் உருவாக இந்த நீதிமன்ற வளாகம் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. இதேபோல் அனைத்து அரசு அலுவலகங்களும் உருவாக மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் எதிர் பார்ப்பாகும்.