மாணவர்களின் தேர்ச்சி கண்காணிப்பு மெல்ல கற்பவர்களுக்கு முக்கியத்துவம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிமாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு தேர்ச்சியை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் முன்பு கல்வி சுற்றுலா,காபி வித் கலெக்டர், உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தின. இந்தாண்டு பெரிய அளவில் கல்வித்துறை செயல்பாடுகள் மாவட்ட அளவில் இல்லை. மாநில அளவில் தொடர்கிறது. வருவாய் மாவட்டத்தின் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை தரநிலை அடிப்படையிலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீத அடிப்படையிலும் ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியாக பள்ளிகள் சிவப்பு மண்டலம்,பச்சை மண்டலங்களாக என்று பிரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. 80 சதவீத தேர்ச்சிக்கு குறைந்த பள்ளிகள் சிவப்பு, 90 முதல் 100 சதவீதம் உள்ள பள்ளிகள் பச்சை மண்டலங்களில் என பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் சிவப்பு மண்டல பள்ளிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து தேர்ச்சி குறைவதற்கான காரணம், தேர்ச்சி அதிகப்படுத்துவதற்கான செயல்பாடுகள் ஆகியவைஆய்வு செய்து கருத்துக்களை வழங்கி வருகின்றனர். வாரத்திற்கு ஒருமுறை சிவப்பு மண்டல பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை நேரடி கண்காணிக்கிறது. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கப்படுகிறது. இது ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் மூலம் பள்ளியில் மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களை நேரடியாக அறிந்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கப்படுகிறது. பிளஸ் டூ தேர்வில்2024-25ல் 7வது இடமும்,10ம் வகுப்பு தேர்வில் 2ம் இடமும் பிடித்துள்ளனர். முழு முயற்சிகள் எடுத்து இந்தாண்டாவது இரு வகுப்புகளில் முதலிடம் பெற வேண்டும் என ஆசிரியர்கள், பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.