கூடுதல் வகுப்பறைகள் கேட்டு மாணவர்கள் போராட்டம்
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு கீழக்கோட்டையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டி தரக்கோரி மாணவர்களும், பெற்றோரும் நேற்று காலை பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.2018ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இப்பள்ளியில் தற்போது 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால் சமுதாய கூடத்தில் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி தரக்கோரி மாணவர்களும், அவர்களது பெற்றோரும் நேற்று காலை 10:00 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த தாசில்தார் ஆண்டாள், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் புதிய வகுப்பறைகள் கட்டுமான பணிகள் துவங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.