மேலும் செய்திகள்
சேவை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
28-Jul-2025
விருதுநகர்:தமிழகத்தில் சமூகநலத்துறையில் ஊர்நல அலுவலர்கள் ஒன்றியங்கள் தோறும் இருப்பது போல் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தாலுகாக்கள் தோறும் அலுவலர்கள் நியமிப்பது அவசிய மாகிறது. தமிழகத்தில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் தொடங்கப்பட்டு இதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்பட்டு வருகிறது. 18 வயதிற்குட்பட்ட பாதுகாப்பு, பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு குழந்தைகள் நலக் குழு மூலம் பாதுகாப்பு, பராமரிப்பு வழங்கப்படுகிறது. சட்டத்திற்கு முரணான குழந்தைகளுக்கு நீதிக் குழுமம் மூலம் கூர்நோக்கு இல்லத்திற்கு மாற்றம் செய்து மறுவாழ்வு அளிக்கின்றனர். குழந்தை பாதுகாப்பு அலகு பணிகளாக குழந்தைகள் இல்லங்களை ஆய்வு செய்வது, இல்ல மேலாண்மை குழுக்கூட்டம் நடத்துவது, அவற்றை பதிவு செய்து முறையாக செயல்படுத்துவதை கண்காணிப்பது, அன்புக் கரங்கள் திட்டத்தில் உதவி வழங்குதல், தத்துவள மையத்தின் வாயிலாக குழந்தைகளை முறையான தத்து வழங்குவது, பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு பணி செய்வது, குழந்தை திருமணம், தொழிலாளரை தடுத்து மீட்பது, பிச்சையெடுத்தலை தடுப்பது, இடைநிற்றல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது, பாதிக்கப்பட்ட, மீட்கபட்ட குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்குவது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வழங்குவது போன்ற பணிகள் செய்கின்றனர். தமிழகத்தில் சமூகநலத்துறையினர் ஊர்நல அலுவலர்கள் பணியிடம் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் செயல்படுகிறது. இதே போல் தாலுகா அளவில் குழந்தை பாதுகாப்பு அலகில் இருந்து அலுவரை நியமித்தால் அதன் பணிகள் இன்னும் துரிதமாக சென்றடையும். குறிப்பாக உதவி தொகை பெறுவோரை கண்டறிவதில் பேரூராட்சி, கிராமப்புற பகுதிகளில் போதிய விழிப்புணர்வு இல்லை. தாலுகா தோறும் அலுவலர்கள் இருந்தால் அவர்கள் கண்டறிந்து திட்டத்தில் சேர்ப்பர். தற்போது வடமாநில தொழிலாளர்கள் எல்லா பகுதிகளிலும் பணிபுரிகின்றனர். அவர்களின் குழந்தைகள் பிச்சையெடுப்பது, வாழ்வாதாரத்திற்காக பெரியவர்கள் செய்யும் ஆபத்தான பணிகளை செய்வதும் நடக்கிறது. இதற்கு தாலுகா அலுவலர்கள் இருந்தால் தீர்வு கிடைக்கும். காலத்தின் தேவையாக உள்ளதால் சமூகநலத்துறை பெண்களுக்கு செயல்படுவது போல், குழந்தைகளுக்கு அதே நலத்திட்ட உதவிகளுடன் செயல்படும் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கும் தாலுகா அலுவலர்களை அரசு நியமிக்க முன்வர வேண்டும்.
28-Jul-2025