உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தென் மாவட்டத்திற்கு அரசு பல் மருத்துவக்கல்லுாரி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

தென் மாவட்டத்திற்கு அரசு பல் மருத்துவக்கல்லுாரி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

விருதுநகர்:முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த விருதுநகர் அரசு பல் மருத்துவக்கல்லுாரிக்கு, முன்னாள் முதல்வர் பழனிசாமி ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்தும் துவங்கப்படவில்லை. கருணாநிதி 2009ல் முதல்வராக இருந்த போது விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லுாரி அமைக்கப்படும் என அறிவித்தார். ஆனால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பின் ஜெயலலிதா தென்மாவட்டங்களில் பல் மருத்துவக்கல்லுாரி துவங்கப்படும் என அறிவித்தார். அவரது மறைவிற்கு பின் 2017ல் முதல்வராக இருந்த பழனிசாமி விருதுநகரில் பல் மருத்துவக்கல்லுாரி அமைக்க ஒப்புதல் அளித்து முதல் கட்டமாக ரூ. 50 கோடி ஒதுக்கீடு செய்தார். இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியும் உடனடியாக நடந்தது. ஆனால் பல் மருத்துவக்கல்லுாரி அமைய வேண்டும் என்றால் குறிப்பிட்ட பகுதிக்குள் அரசு மருத்துவக்கல்லுாரி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லுாரி 2022 ஜன. 12ல் திறக்கப்பட்டது. அந்த வளாகத்திற்கு அருகே பல் மருத்துவக்கல்லுாரி அமைக்க 5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. சிறப்பு அலுவலராக சென்னை பல் மருத்துவக்கல்லுாரி பேராசிரியர் ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். ஆனால் இடம் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்தும் கட்டுமானப்பணிகள் துவங்கப்படவில்லை. கடந்தாண்டு புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவக்கல்லுாரி துவங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் அறிவித்த விருதுநகர் அரசு பல் மருத்துவக்கல்லுாரி திட்டத்தை தி.மு.க., ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை செயல்படுத்தவில்லை. தென்மாவட்டங்களில் இதுவரை பல்மருத்துவக்கல்லுாரி இல்லை. எனவே விருதுநகரில் அரசு பல் மருத்துவக்கல்லுாரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை