உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ரயில்வே மேம்பாலம் அமைக்க டெண்டர் விட்டும் பணியை துவக்க தாமதம்

 ரயில்வே மேம்பாலம் அமைக்க டெண்டர் விட்டும் பணியை துவக்க தாமதம்

சிவகாசி: திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விட்டும் பணியை துவங்காமல் தாமதமாக வருவதால் மக்கள் சிரமமப்பட்டு வருகின்றனர். விரைவில் பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருத்தங்கல் ரயில்வே வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் எக்ஸ்பிரஸ், பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் 10 க்கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில்வே கேட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர் நகருக்கு வந்து செல்கின்றனர். காலை 8:15 மணியிலிருந்து 9:30 மணிக்கு இரு ரயில்கள் இந்த வழித்தடத்தில் செல்கிறது. அந்த நேரத்தில் 40 நிமிடம் கேட் அடைக்கப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்பவர்களும், மாணவர்களும் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மதியம் இரு முறையும், மாலை 5:30 மணிக்கு இரு முறையும், இரவிலும் அடுத்தடுத்து ரயில்களுக்காக கேட் அடைக்கப்படுகிறது. இதனால் அந்த நேரங்களில் அவ்வழியாக செல்பவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்நேரங்களில் வரும் ஆம்புலன்சும் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே இங்கு ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக முதல் கட்ட பணியாக மண் பரிசோதனை பணி, நில அளவீடு பணிகள் நடந்தது. அரசிதழில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2024 ஜன. ல் சாட்சியாபுரம், திருத்தங்கலில் பாலம் அமைக்க பிரதமர் மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். சாட்சியாபுரத்தில் பாலம் அமைக்கும் பணி முடிந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஆனால் திருத்தங்கலில் அதற்கு அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை. சமீபத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திருத்தங்கலில் பாலம் அமைக்க ரூ. 45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். அதன்படி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. எனவே விரைவில் திருத்தங்கலிலும் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை துவங்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி