பணமே இல்லாமல் டெண்டர்: பணிகள் முடிந்ததும் கைவிரிப்பு விரக்தியில் ஒப்பந்ததாரர்கள்
அருப்புக்கோட்டை: மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் ஊராட்சிகளில் வறட்சி நிவாரணம் திட்டத்தின் கீழ் பணிகளை செய்து முடித்துவிட்டு 3 மாதங்களாக பணம் பெற முடியாமல் ஒப்பந்தகாரர்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இவற்றில் பல ஊராட்சி ஒன்றியங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், வாறு கால்கள், ரோடுகள் அமைத்தல், சிறு பாலங்கள் கட்டுதல், பேவர் பிளாக் கல் பதித்தல் உட்பட பணிகள் செய்யப்படுகின்றன. இதே போன்று, வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ், அத்தியாவசியமான குடிநீர் பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டன.இரண்டு திட்டங்களின் மூலம் பணிகளை செய்து முடித்து மூன்று மாதங்களாகியும் இதற்கான பின் தொகை பெற முடியாமல் 40க்கும் மேற்பட்ட ஒப்பந்தக்காரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு நடையாய் நடக்கின்றனர். வறட்சி நிவாரண பணிகளை செய்கிறபோது அதற்கான தொகையை அரசு உடனடியாக நிதியை ஒதுக்கும். நிதி வந்த பின் தான் அவசரகால பணிகளாக வறட்சி நிவாரணத் திட்ட பணிகள் செய்யப்படும். உடனடியாக பின் தொகையும் பாஸ் செய்யப்படும். இதனால் இது போன்ற பணிகளை ஒப்பந்தக்காரர்கள் உடனடியாக செய்து முடித்து விடுவர். ஆனால் இந்த ஆண்டு செய்த வறட்சியை நிவாரண பணியில் செய்யப்பட்ட வேலைகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் பில் தொகைக்காக ஒப்பந்ததாரர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதேபோன்று அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகளுக்கும் பில்லில் ஒரு பகுதி தொகை தான் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கும் ஒப்பந்ததாரர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு காவடி எடுத்த வண்ணம் உள்ளனர்.இதுகுறித்து ஒப்பந்தக்காரர்கள்: வறட்சி நிவாரண பணிகள் அவசர கால அடிப்படையில் செய்யப்படுகிறது.பணிகள் முடிந்தவுடன் உடனடியாக பில் பாஸ் செய்யப்படும். பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வறட்சி நிவாரண பணிகள் செய்து முடித்து 4 மாதங்களாகியும் பில் தொகை பாஸ் செய்யப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் சென்னையில் இருந்து பணம் வரவில்லை என்ற பதிலைத்தான் கூறுகின்றனர்.தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களில் வர உள்ள நிலையில் நாங்கள் பணத்திற்கு நடையாய் நடக்கின்றோம்.கட்டுமான பொருட்கள் வாங்கிய கடைக்காரர்களுக்கும், பணிகள் செய்ய கடன் வாங்கியவர்களிடத்திலும் பதில் சொல்ல முடியாமல் ஓடி ஒளிய வேண்டிய நிலையில் அரசு எங்களை வைத்து விட்டது. மாவட்ட நிர்வாகம் தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.