அ.தி.மு.க.,வினருக்கு முதுகெலும்பு இல்லை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தாக்கு
சாத்துார்: அ.தி.மு.க.,வினருக்கு முதுகெலும்பு இல்லை என சாத்துார் தாயில்பட்டியில் நடந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் விமர்சித்தார்.அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் போனாலும் தமிழகம் 9.69 சதவீதம் தொழில் வளர்ச்சி பெற்றுள்ளது.மத்திய அரசை பிரதமர் மோடியை துணிவோடு எதிர்த்துப் போராடி வரும் தலைவர் ஸ்டாலின் மட்டுமே. அமித்ஷா அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி குறித்து அறிவிக்கும் போது தமிழகத்தில் கூட்டணிக்கு தலைவர் பழனிசாமி எனக் கூறினாலும் முதுகெலும்பு இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து இருந்தார். அ.தி.மு.க.வினருக்கு முதுகெலும்பு இல்லை. பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படும் போதுதான் நாங்கள் தலையிடுவோம் மற்ற நேரத்தில் தலையிட மாட்டோம். எல்லாருக்கும் தேவையான நல்லதை எங்களால் மட்டுமே செய்ய முடியும், என்றார்.