நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ தேரோட்டம்
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.சிவகாசி அருகே திருத்தங்கலில் 108 திவ்ய தேசத்தில் ஒன்றான பிரசித்தி பெற்ற நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா ஜூலை 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமிகள் சிம்ம, யானை, சேஷ உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடந்தது. 9 ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட தேரில் நின்ற நாராயண பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற பக்தி கோஷம் முழங்கியபடி தேரை இழுத்து வழிபட்டனர். பெண் பக்தர்கள் பஜனை பாடியும், கோலாட்டம் ஆடியும் வந்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. ஜூலை 16ல் புஷ்ப யாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை ததியாராதனை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.