கட்டிய சில நாட்களிலேயே இடிந்து விழுந்த வாறுகால்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நகராட்சி மூலம் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் தெருவில் கட்டப்பட்ட வாறுகால் கட்டிய சில நாட்களிலேயே இடிந்து விழுந்தது. அருப்புக்கோட்டை நகராட்சி முஸ்லிம் நடுத்தெருவில் 15 வது நிதி குழு திட்டத்தின் கீழ், நகராட்சி மூலம் மணி நகரம் ஓடை, மேட்டுத்தெரு ஓடை, நடுத்தெருவில் வாறுகால் என, ரூ.3.15 கோடி நிதியில் பணிகள் செய்ய டெண்டர் விடப்பட்டது. இதில் முஸ்லிம் நடுத்தெருவில் ரூ.22 லட்சம் நிதியில் வாறுகால் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்பு நடந்தது. வாறுகால் கட்டப்பட்டு வரும் நிலையில், நேற்று முன்தினம் மாலை பெய்த சிறிய மழைக்கு வாறுகாலின் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. சிறிய மழைக்கு கூட தாங்காத வாறுகால் தடுப்புச்சுவரின் தரம் கேள்வி குறியாக உள்ளது. நகராட்சி அதிகாரிகள் டெண்டர் விடுவதுடன் சரி, பணிகள் முறையாக தரமாக நடக்கிறதா என ஆய்வு செய்வது இல்லை. இதனால் இது போன்ற தரமற்ற பணிகள் நகரின் பல பகுதிகளில் நடக்கிறது. மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கில் வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் நகராட்சி அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன் வாறுகாலின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்.