விருதுநகர்: மண் ரோடுகள்,அங்கன்வாடி முன் மழைநீர், குடிநீர் தொட்டி சேதம், காட்டுப்பன்றிகள் தொல்லை, ஆழமற்ற கண்மாய் என விருதுநகர் ஒண்டிப்புலிநாயக்கனுார் ஊராட்சியில் பல்வேறு அடிப்படை வசதி குறைபாடு காரணமாக மக்கள் அவதியை சந்தித்து வருகின்றனர். விருதுநகர் ஒன்றியம் ஒண்டிப்புலிநாயக்கனுார் ஊராட்சியில் ஒண்டிப்புலிநாயக்கனுார், நடுவப்பட்டி, ஓ.முண்டலாப்புரம் என மூன்று உட்கடை கிராமங்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு அடிப்படை வசதி குறைபாடுகள் உள்ளன. தாதம்பட்டியில் இருந்து ஒண்டிப்புலிநாயக்கனுார் செல்லும் இணைப்பு ரோடு மிக மோசமான நிலையில் உள்ளது. ஒண்டிப்புலிநாயக்கனுாரில் துவக்கப்பள்ளி அருகே கட்டுமான பணி நடப்பதால் மாணவர்கள் நுாலகத்தில் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. பழைய ஊராட்சி அலுவலக கட்டட கூரை இடிந்து விட்டது. ஆனால் கட்டடம் இன்னும் முழுமையாக இடிக்கப்படவில்லை. இதை இடிக்க வேண்டும். மழை பெய்தால் அங்கன்வாடி முன் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.மேற்கு பகுதி லட்சுமி நகரில் மண் ரோடாக தான் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. வெறும் மண் ரோடாக இருப்பதால் மழை தேங்கும், வழியும் இடங்கள் பள்ளத்தை ஏற்படுத்தி வாகன ஓட்டிகளை இடறி விழச் செய்கிறது. வாறுகால் வசதி போதுமானதாக இல்லை. நடுவப்பட்டியின் வெளிப்பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி மிகவும் மோசமான நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. ஊரின் பொது மயானத்திற்கு ரோடு இல்லை. பொது சுகாதார வளாகம் புதர்மண்டி காணப்படுகிறது. ஓ.முண்டலாப்புரம் மெயின் ரோட்டில் இருந்து கண்மாய் முடியும் பகுதி வரை உள்ள வாறுகால் பணிக்கு நிதி ஒதுக்கியும் பணிகள் துவங்கவில்லை. இதனால் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாகிறது. ரயில்வே சுரங்கப்பாதை மழைநீர் தேங்கினால் மக்கள் கடந்து செல்ல முடியாது. மேடாக உள்ள கண்மாயை ஆழப்படுத்த வேண்டும்.
ரோடு வசதி இல்லை
ஒண்டிப்புலிநாயக்கனுார் மேற்கு பகுதி லட்சுமி நகரில் ரோடு வசதி இல்லை. குடிநீர் தரமின்றி உவர்ப்பு சுவையுடன் உள்ளது. மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். ரோடு குடிநீர் வசதி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.பாண்டி, விவசாயி.
வாறுகால் பணிகள் அவசியம்
ஓ.முண்டலாப்புரத்தில் இருந்து கண்மாய் செல்லும் வாறுகால் பணிகளை விரைந்து துவக்க வேண்டும். ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கினால் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாது. - ஏ.சுப்பையா, சென்ட்ரிங் தொழிலாளி.
காட்டுப்பன்றிகள் அட்டூழியம்
மக்காச்சோள விளைநிலங்கள் காட்டுப்பன்றிகளால் சேதமாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இன்னொரும் பக்கம் மானும், முயலும் சேதம் ஏற்படுத்துகிறது. காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். - சோமசுந்தரம், விவசாயி.
வாறுகால் பணிகள் அவசியம்
ஓ.முண்டலாப்புரத்தில் இருந்து கண்மாய் செல்லும் வாறுகால் பணிகளை விரைந்து துவக்க வேண்டும். ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கினால் விவசாய பணிகளுக்கு செல்ல முடியாது. - ஏ.சுப்பையா, சென்ட்ரிங் தொழிலாளி.