குண்டும் குழியுமாக மோசமான நிலையில் மேட்டமலை- - இ.குமாரலிங்கபுரம் ரோடு
விருதுநகர் : சாத்துார் அருகே உள்ள மேட்டமலை முதல் இ.குமாரலிங்கபுரம் வரையுள்ள ரோடு போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளது. இதை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.சாத்துார்- - சிவகாசி செல்லும் ரோட்டில் உள்ளது மேட்டமலை. இங்கிருந்து இ.குமாரலிங்கபுரம் வரை செல்ல 4 கி.மீ துாரம் உள்ளது. இதன் ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் தற்போது மேடு, பள்ளம் நிறைந்து மிக மோசமான நிலையில் உள்ளது.இவ்வழியே செல்லும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. வாகனங்களில் பெரும் பழுது ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். பி.எம்., மித்ரா ஜவுளி பூங்கா பணிகள் நடப்பதால் மேட்டமலை - -இ.குமாரலிங்கபுரம் ரோடு மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. ஜவுளி பூங்கா விரிவாக்கத்திற்காக குமாரலிங்கபுரத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.இதன் வழியாக விரைவில் மேட்டமலை சென்று விடலாம் என வருவோருக்கு ஆபத்தை தருகிறது இந்த மோசமான ரோடு. மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், உடனடியாக, சேதமடைந்து மோசமான நிலையில் உள்ள மேட்டமலை- - இ.குமாரலிங்கபுரம் ரோட்டை புதுப்பிக்க வேண்டும்.