திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் முழுவீச்சில் செயல்படாத புதிய கலெக்டர் அலுவலகம் பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் தாமதம்
விருதுநகர்: விருதுநகரில் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் தற்போது வரை புதிய கலெக்டர் அலுவலகம் முழுவீச்சில் செயல்படாமல் உள்ளது. பொதுப்பணித்துறையின் அலட்சியத்தால் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்டவை அமைப்பதில் சுணக்கம் நீடிப்பதால் தாமதம் தொடர்கிறது.விருதுநகர் புதிய கலெக்டர் அலுவலகம் ரூ.77.12 கோடியில் ஆறு தளங்களுடன் அமைந்தது. இந்த கட்டடம் 2,06,756 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 132 இருக்கை வசதி கொண்ட குறைதீர் கூட்ட அரங்கம், 4ம் தளத்தில் கலெக்டர் அறை என அமைக்கப்பட்ட இந்த கட்டடம் 2024 நவ. 10ல் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.6 தளங்களிலும், எந்தெந்த அறைகளில் எந்தெந்த அலுவலகங்கள் என அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் திறந்து வைத்த மறு நாளே கலெக்டர் அறை மாற்றப்பட்டது. அதன் பிறகு மெல்ல டி.ஆர்.ஓ., நேர்முக உதவியாளர் பொது அலுவலகங்கள், வளர்ச்சி பிரிவு, ஐ பிரிவு போன்ற அலுவலகங்கள் மாற்றப்பட்டன. ஆனால் முக்கிய அலுவலகங்கள் மாற்றப்படவில்லை. 80 சதவீத அறைகள் காலியாகவே உள்ளன. திறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது வரை கட்டடம் முழுவீச்சில் செயல்பாட்டில் இல்லை.கட்டடம் திறந்த போதே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் திறந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து அதற்கு நிதி ஒதுக்கி பொதுப்பணித்துறை பணிகளை துவங்கியது. ஆனால் அந்த பணிகளை ஆமை வேகத்தில் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் இன்னும் நிரந்தர மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. அரசு ஊழியர் சங்கமும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.தற்போதுபுதிதாக பள்ளிக்கல்வித்துறை அலுவலகம் புதிய கலெக்டர் அலுவலகம் இடம் பெறுகிறது. சமூகநலத்துறை, கருவூலகத்துறை போன்றவை வருகிறது. அவற்றிற்கான இணைய இணைப்பு போன்றவற்றிற்கு நிதி ஒதுக்க தாமதமானதும் இதற்கு ஒருகாரணம் எனப்படுகிறது. இருப்பினும் மார்ச் முதல் வாரம் புதிய கலெக்டர் அலுவலகம் முழுவீச்சில்செயல்பாட்டிற்கு வரும் என மாவட்ட உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.பொதுப்பணித்துறை கட்டடங்கள் செயற்பொறியாளர் செந்துார்ராஜா கூறியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் பணிகள் முடிந்து விட்டது. சோதனை ஓட்டம் நடக்கிறது. அதை பரிசோதித்து சான்று பெற்றதும், மின் இணைப்பு பெறப்பட்டு விரைவில் கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ஏற்கனவே மாற்றப்பட்ட அலுவலகங்களுக்கு நிரந்தர மின் இணைப்பு பெறப்பட்டு விட்டது, என்றார்.