உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செவிலியர் மீதான வன்கொடுமையை கண்டித்து நாளை போராட்டம் செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு

செவிலியர் மீதான வன்கொடுமையை கண்டித்து நாளை போராட்டம் செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு

விருதுநகர்:''திருச்சி மாவட்டம் ஒரத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிமுடித்து வீடு திரும்பிய செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாளை (நவ., 4) அனைத்து கலெக்டர் அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கப் பொதுச் செயலாளர் சுபின் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவில் டாக்டர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் நிலையுள்ளது. அப்போது சமூக விரோதிகளால் செவிலியர்கள் பல்வேறு தாக்குதலுக்கு ஆளாகுவது தொடர் கதையாக உள்ளது.அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியில் அமைந்துள்ளன. இங்கு இரவு காவலர்கள் இல்லாததால் செவிலியர்கள் அச்சத்துடன் பாதுகாப்பற்ற நிலையில் பணிபுரிய வேண்டியுள்ளது.மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இருந்தும் அசாம்பாவிதம் நடக்கும் போது நிர்வாகத்தினர் சட்ட நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர். 24 மணி நேரம் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள், ஊழியர்களை பாதுகாக்க இரவு காவலர்களை நியமிக்க வேண்டும்.சுகாதார நிலையங்களில் சுற்றுச்சுவர் அமைத்து சி.சி.டி.வி., கேமராக்கள் செயல்படுவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குற்றச்சம்பவங்கள் நடக்காதபடி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதை மருத்துவத்துறை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை அனைத்து கலெக்டர் அலுவலகங்களிலும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ