உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தாமதமாக வரும் அலுவலர்கள் உணவிலும் தரமில்லை என புகார்
விருதுநகர், : விருதுநகரில் நேற்று நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சில அலுவலர்கள் வரவில்லை. தொடர்ந்து நடந்து வரும் முகாம்களில் பங்கேற்கும் அலுவலர்களுக்கு வழங்கப்படும் உணவிலும்தரமில்லை என புகார் எழுந்துள்ளது. தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் 349 முகாம்கள் நடக்க உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. கிராமப்பகுதியான 11 ஊராட்சி ஒன்றிய பகுதியில் 229 முகாம்களும், நகரப்பகுதிகளான சிவகாசி மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சி பகுதிகளில் 120 முகாம்கள் என மொத்தம் 349 முகாம்கள் நகரப்பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகளும், ஊரகப்பகுதிகளில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும் அளிக்கப் படுகிறது. மாவட்டத்தில் ஜூலை 15 முதல் நவ. 7 வரை நடந்து வருகிறது. இந் நிலையில் நேற்று விருதுநகரில் பெரிய பள்ளிவாசலில்நடந்த முகாமில் சில அலுவலர்கள் காலை 11:00 மணிக்கு தான் வந்தனர். அதுவரை மக்கள் காத்திருந்து பின் மனு வழங்கினர். இதே போல் மாவட்டத்தில் பிற பகுதிகளில் நடக்கும் முகாமிலும் அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்பதில்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அதே போல் பங்கேற்ற அலுவலர் களுக்கும் வழங்கப்பட்ட உணவு வகைகள் தரமின்றி இருப்பதாக கூறுகின்றனர். இதனால் முகாம் நடக்குமிடத்திற்கு அருகே உள்ள ஓட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு வருகின்றனர். உணவு தரமின்றி வழங்குவதால், இதை யார் டெண்டர் எடுத்தார் என்பது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உணவில் தரம் குறைவாக உள்ளதால் சிலர் முகாம் மீது ஆர்வம் இழந்து விட்டனரா என தெரியவில்லை. மக்கள் குறைகளை தீர்க்கும் இம்முகாமில் தாமதம் இன்றி அலுவலர்கள் வருவதை உறுதி செய்ய வேண்டும்.