உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டு தோட்டங்களில் அசத்தும் ஆனந்தா நகர் மக்கள் மூலிகைகளுடன் மலர் செடிகள் வளர்ப்பு

வீட்டு தோட்டங்களில் அசத்தும் ஆனந்தா நகர் மக்கள் மூலிகைகளுடன் மலர் செடிகள் வளர்ப்பு

சாத்துார் அருகே சத்திரப்பட்டி ஆனந்தா நகரில் வீட்டு தோட்டத்தில் மூலிகைச் செடிகளோடு மலர் செடிகள் வளர்ப்பதில் அப்பகுதி மக்கள் ஆர்வமாக உள்ளனர். மனிதர்கள் நலமோடு வாழ்வதற்கு சுத்தமான காற்று அவசியம். நவீன காலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கை காரணமாக மனிதர்கள் சுவாசிக்கும் காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரித்து வருகிறது. சாத்துார் ஆனந்தா நகரில் வீடுகள் தோறும் தோட்டம் போல மரங்கள் வளர்த்து வருகின்றனர் அப்பகுதி மக்கள். வாழை, தென்னை, செம்பருத்தி, துாதுவளை, ஓமம், மாதுளை, கொய்யா, சப்போட்டா, எலுமிச்சை நார்த்தங்காய் என பல்வேறு பயன் தரும் மரங்களை வளர்த்து வருகின்றனர். இதனால் இந்த நகர் பகுதியில் உள்ள வீடுகள் முழுவதும் குளுமையான சூழல் நிலவுகிறது. ஆனந்தா நகரில் சுப்புராஜ் 85, என்ற முதியவர் தன்னந்தனியாக தனது வீட்டுக்கு பின்புறம் உள்ள பகுதியில் பல்வேறு செடிகளை பராமரித்து வளர்க்கிறார். இதனால் கடுமையான கோடைகாலத்திலும் அவரது வீடு குளுகுளுவென காணப்படுகிறது. வயதான காலத்திலும் வீணாகும் வீட்டின் கழிவு நீரை பாய்ச்சி பலன் தரும் மரங்களை வளர்த்து வரும் அவர் இளைஞர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார். ஒவ்வொரு வீட்டிலும் சிறிய தோட்டம் அமைப்பதன் மூலம் சுத்தமான காற்று கிடைப்பதோடு, பறவைகள் அணில்கள் போன்ற மிருகங்களுக்கும் மரங்கள் வாழ்விடமாகவும் மாறுகிறது. இதனால் பல்லுயிர் பெருக்கம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்தினரும் வீட்டின் அருகில் காலியாக உள்ள இடத்தில் மரங்களை வளர்ப்பதன் மூலம் மாசில்லா நகர் உருவாகும்.

தணியாத ஆர்வம்

சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள நர்சரியில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததால் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் மரம் வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. தற்போது எனது வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் மரங்கள், செடிகளால் குளுமையான சூழல் நிலவுகிறது. என்னை பார்த்து மற்றவர்களும் மரங்கள் வளர்க்கின்றனர். அது மனதுக்கு சந்தோசமாக உள்ளது. - சுப்புராஜ், ஓய்வு ஊராட்சி நர்சரி உதவியாளர்.

பறவைகள் ரம்மியம்

வீட்டின் அருகில் அடுத்தடுத்து மரங்கள் வளர்க்கப்படுவதால் ஏராளமான பறவைகள் மரங்களை தங்குகின்றன. காலை நேரத்தில் துாக்கணாங்குருவி, சிட்டுக்குருவி என பல்வேறு பறவைகள் கீச்சிடுவதால் அதிகாலை நேரத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஆனந்தா நகரில் பலர் தங்கள் வீடுகளுக்கு பின்னால் செம்பருத்தி, மல்லிகை ,ரோஜா , காட்டு ரோஜா என பல்வேறு செடிகளை வளர்த்து வருகின்றனர். மரம் வளர்ப்பதில் சத்திரப்பட்டி ஊராட்சி ஆனந்தா நகர் மக்கள் மற்ற பகுதி மக்களுக்கு முன் உதாரணமாக உள்ளனர். - அருள் வேந்தன், தனியார் ஊழியர். பறவைகள் ரம்மியம் வீட்டின் அருகில் அடுத்தடுத்து மரங்கள் வளர்க்கப்படுவதால் ஏராளமான பறவைகள் மரங்களை தங்குகின்றன. காலை நேரத்தில் துாக்கணாங்குருவி, சிட்டுக்குருவி என பல்வேறு பறவைகள் கீச்சிடுவதால் அதிகாலை நேரத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஆனந்தா நகரில் பலர் தங்கள் வீடுகளுக்கு பின்னால் செம்பருத்தி, மல்லிகை ,ரோஜா , காட்டு ரோஜா என பல்வேறு செடிகளை வளர்த்து வருகின்றனர். மரம் வளர்ப்பதில் சத்திரப்பட்டி ஊராட்சி ஆனந்தா நகர் மக்கள் மற்ற பகுதி மக்களுக்கு முன் உதாரணமாக உள்ளனர். - அருள் வேந்தன், தனியார் ஊழியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை