குடியிருப்புகளுக்கு மழைநீர் ஆதாரமாக மாறிய குட்டை --சாதித்த பச்ச மடம் இளைஞர்கள்
ரா ஜபாளையத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களின் முயற்சியால் நகராட்சியில் குடியிருப்பு பகுதியில் இருந்த கழிவுநீர் குட்டை தற்போது மழைநீர் தெப்பமாக மாறி 10 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ராஜபாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நீர்வரத்து காரணமாக பெரும்பாலான பகுதி பசுமை போர்த்தி காணப்பட்டது. இதனால் தொடக்க காலத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதானமாக இருந்து வந்த நிலையில் குடியிருப்பு பகுதியைச் சுற்றி பத்திற்கும் அதிகமான ஊருணிகள் இருந்து வந்தன. மக்களுக்கான அடிப்படை நீர் ஆதாரமாக இவை இருந்த நிலையில் சுத்தமாக பேணி காக்கப்பட்டு வந்தன. காலப் போக்கில் புதிய தொழில்கள், குடியிருப்புகள் அதிகரித்ததன் காரணமாகவும் தண்ணீர் தேவை அதிகரித்ததால் பல்வேறு நீர் ஆதாரங்களில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டன. இதன் காரணமாக கைவிடப்பட்ட ஊருணிகள் சாக்கடை குளமாகவும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டும் கிடங்குகளாகவும் மாற்றப்பட்டன. இந்நிலையில் ராஜபாளையம் வடக்கு பகுதி திருவனந்தபுரம் தெருவில் அமைந்துள்ள பச்சமடம் குடியிருப்பில் இருந்த ஊருணியை மழைநீர் தேங்கும் குளமாக மாற்ற இப்பகுதி திருவனந்தபுரம் கோட்டை சத்திரிய ராஜூக்கள் இளைஞர் சங்கத்தினர் முயற்சி மேற்கொண்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் இளைஞர் சங்க நிர்வாகிகள் முன்னெடுப்பில் பல லட்சம் செலவில் துார்வாரி மண் அள்ளும் இயந்திரம் மூலம் துார் வாரும் பணி தொடங்கி நடந்து வந்த நிலையில், நோக்கம் கண்டு நகராட்சியும் கைகோர்த்து திட்டத்தை விரிவு படுத்தியது. இதன் பலனாக நீர்நிலையை சுற்றி தடுப்பு அமைத்து சுற்றிலும் நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு புதிதாக மாறி உள்ளது. தற்போது நகராட்சி பகுதி குடியிருப்புக்கு இடையே உள்ள ஒரே சாக்கடை கலக்காத நன்னீர் தேக்கமாக திகழ்கிறது. நடைபாதையை சுற்றிலும் பல்வேறு மூலிகை மரங்கள், பறவைகள் வந்து அமர்வதற்கு பழவகை மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதால் இந்த கடும் கோடையிலும் நகர் பகுதி நடுவே பசுமையான சூழலுடன் காணப்பட்டு வருகிறது. குடியிருப்புகளுக்கு ஆதாரம் ராமச்சந்திரன், உறுப்பினர்: நகரில் தற்போது தண்ணீர் வற்றாத ஒரே நன்னீர் தெப்பமாக இருந்து வருகிறது. முன்பு நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்கு இருந்து தண்ணீர் பற்றாக்குறை பகுதியாக இருந்தது. தற்போது சுற்றியுள்ள குடியிருப்புகளான பச்சமடம், மங்காபுரம், ஆண்டத்தம்மன் கோயில் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு நிலத்தடி நீர் ஆதாரமாக மாறியுள்ளது. பசுமைக்கு பயன் தரும் மரங்கள் சரவணன், உறுப்பினர்: நீர் நிலையை சுற்றி அனைவருக்கும் நடைபாதைக்கு பேவர் பிளாக் கற்கள் பதித்து சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வைத்தும் வெயில் வாட்டியது. எனவே நிழலுடன் பயன் தரும் மரங்களான அத்தி, நாவல், கருநொச்சி, மருதம், வேம்பு, அரசு போன்ற பல்வேறு மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதால் பசுமையான சூழல் நிலவுவதுடன் மனதிற்கு இனிமையான அனுபவமாக மாறி உள்ளது.