மீண்டும் துவங்கிய பேனர் கலாசாரம் அலட்சியத்தில் நகராட்சி
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை நகரின் பல பகுதிகளில் மீண்டும் மெகா பேனர் வைக்கும் கலாசாரம் துவங்கி உள்ளதை நகராட்சி நிர்வாகம் அகற்றாமல் வேடிக்கை பார்க்கிறது.அருப்புக்கோட்டையில் நகராட்சி பகுதிகளில் பேனர் வைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் கெடுபிடி காட்டியதால் பேனர் வைப்பது குறைந்து போனது. நகரில் சில காலம் பேனர் இல்லாமல் இருந்த காலம் போய் தற்போது, திருமண நிகழ்ச்சிகள், கட்சிகள் நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மெகா அளவில் பேனர்கள் வைக்கின்றனர்.சொக்கலிங்கபுரம், காந்தி நகர் மற்றும் திருமண மண்டபங்கள், மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, பந்தல்குடி ரோடு உட்பட பல பகுதிகளில் மெகா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை காற்றுக்கு ஆடி பொதுமக்களை பீதியில் ஆழ்த்துகிறது. இன்னும் சில பள்ளி மாணவர்கள் செல்லும் ரோட்டில் வைக்கப்பட்டுள்ளன.நிகழ்ச்சி முடிந்தாலும் இவற்றை அகற்றுவது கிடையாது. அகற்ற நகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பல பேனர்கள் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை எதையும் கண்டு கொள்ளாமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் பேனர் வைப்பதில் கெடுபிடி காட்ட வேண்டும்.