கைமுறை வில்லங்க சான்று தராமல் ஒன்றரை மாதம் இழுத்தடிக்கும் அவலம்
விருதுநகர்: விருதுநகரில் இணைப்பதிவாளர் அலுவலகம் எண் 1, 2ல் கைமுறையாக செய்யப்பட்ட வில்லங்க சான்றிதழ் தராமல் ஒன்றரை மாதமாக இழுத்தடிப்பதால் விண்ணப்பித்து சான்று ஒப்புதல் ஆனோர் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கைமுறை வில்லங்க சான்று என்பது, ஒரு சொத்து வில்லங்கங்கள் இல்லாத சான்றாக, அதாவது சொத்து யாருடைய கைகளில் இருந்து எப்படி மாறி வந்துள்ளது, சொத்து உரிமை யாருக்கு மாற்றப்பட்டது போன்ற விவரங்களை அறிந்துகொள்ளும் ஆவணமாக உள்ளது. ஒரு சொத்துக்கு யார் உரிமை உள்ளவர் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு சான்று. சொத்தின் மீதான எந்தவொரு கடன்கள், வழக்குகள், அல்லது பிற வில்லங்கங்கள் ஏதும் இல்லையென்பதை அறிய உதவுகிறது.இதை ஆங்கிலத்தில் மேனுவல் ஈ.சி., என்பர். விருதுநகர் பத்திர அலுவலகத்தில் இணைப்பதிவாளர் 1, 2 அலுவலகங்களில் ஒன்றரை மாதங்களாக மேனுவல் ஈசி., தருவது கிடையாது என்ற குற்றச்சாட்டு உள்ளது. மூன்று நாட்களில் வழக்கமாக தந்து விடுவர். டி.ஐ.ஜி., ஆடிட்டிங் நடப்பதால் ஒரு மாதம் தாமதம் செய்தனர். மீண்டும் 15 நாட்களுக்கு மேல் தாமதமாகி உள்ளது. பூர்வீக சொத்தை பதிய 1950ல் இருந்து ஈ.சி., வேண்டும். ஆளில்லை என்று கூறி தர மறுக்கும் இவர்கள், 'கவனிக்கும்' ஒரு சிலருக்கும் மட்டும் கொடுப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஈ.சி., எனும் இந்த வில்லங்க சான்று இருந்தால் தான் நிலத்தை பதிய முடியும். ஏழைகளுக்கு ஈ.சி., கிடைப்பதில் கடும் சிரமம் உள்ளது. பல பேருக்கு இது போல் கொடுக்காமல் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கைமுறை வில்லங்க சான்றான மேனுவல் ஈ.சி., கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.