முதல்வர் திறந்து ஒரு ஆண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத பயணியர் விடுதி
சாத்துார்: சாத்துார் சடையம்பட்டியில் கட்டப்பட்டுள்ள பயணியர் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்து ஓராண்டாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சாத்துார் மன்னார் கோட்டை ரோட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதி பழைய கட்டடம் உள்ளது. இந்தக் கட்டடம் பழுதான நிலையில் சடையம்பட்டியில் ரூ.35 கோடி மதிப்பில் அரசு புதிய பயணியர் விடுதி கட்டியுள்ளது. இந்த புதிய பயணியர் விடுதி கட்டி முடிக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரும் கடந்த ஒரு வருடமாக மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. புதிய பயணியர் விடுதி பயன்பாட்டிற்கு வராத நிலையில் மக்கள் யாரும் பயன்படுத்தாமல் புதிய கட்டடம் காட்சி பொருளாக மாறிவிட்டதுடன் தற்போது புற்கள் முளைத்து பரிதாபமான நிலையில் உள்ளது. புதிய கட்டடம் பாழடைந்து சேதம் அடைவதற்கு முன்பாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென சாத்துார் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.