தீபாவளி வசூலில் சிக்கியவர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்
விருதுநகர்: விருதுநகரில் தீபாவளிக்காக நோட்டு போட்டு ரூ.4.94 லட்சம் வசூலித்த தீயணைப்புத்துறையைச் சேர்ந்த ஹரிசந்திரன், நவநீதகிருஷ்ணன், வினோத் வேறு மாவட்டங்களுக்கு வெளிப்பணிக்கு மாற்றப் பட்டுள்ளனர். விருதுநகர் தீயணைப்புத்துறையைச் சேர்ந்த ஹரிசந்திரன், நவநீத கிருஷ்ணன் ,வினோத் ஆகியோர் விருதுநகர் கடைகள், நிறுவனங்களிடம் தீபாவளிக்கு வசூல் செய்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி.,ராமச்சந்திரன் அக்.13ல் இரவு அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.59 ஆயிரத்து 500 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் வினோத் வங்கி கணக்கில் ரூ.3.79 லட்சம் இருப்பதை கண்டறிந்தனர். மூவரும் தீபாவளிக்காக தனியாக நோட்டு போட்டு 15 நாட்களாக மொத்தம் ரூ.4.94 லட்சம் வசூலித்ததும் தெரிந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிந்தனர். இதையடுத்து ராமநாதபுரம் சாயல்குடிக்கு ஹரிசந்திரன், மதுரை மேலுாருக்கு நவநீத கிருஷ்ணன், தேனி மயிலாடும்பாறைக்கு வினோத்தை வெளிப்பணிக்கு மாற்றி தென்மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார்.