சாத்துார் ரயில்வே பீடர் ரோட்டில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து நெரிசல்
சாத்துார்: சாத்துார் ரயில்வே பீடர் ரோட்டில் ராஜஸ்தான் லாரி நேற்று திடீரென பழுதாகி நின்றதால் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராஜஸ்தான் லாரி நேற்று ரயில்வே பீடர் ரோடு வழியாக இருக்கன்குடி செல்வதற்காக காலை 10:30 மணிக்கு வந்தது.ரயில்வே கேட் அருகில் லாரி வந்தபோது திடீரென பழுதானது. லாரி ஒரு பாதையில் நின்று கொண்டதால் மற்றொரு பாதை வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தங்கள் வாகனங்களில் வந்திருந்தனர். இந்த நிலையில் நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக ரயில்வே கேட்டை மூட ரயில்வே கேட் கீப்பர் முயன்ற போது தொடர்ந்து அதிக அளவில் வாகனங்கள் கடந்து சென்றதால் கேட்டை மூட முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நல்லி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. லாரியை உடனடியாக எடுக்கும்படி கூறிய ரயில்வே கேட் கீப்பருக்கும் லாரி டிரைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அம்மா பட்டி போலீசார் இருவரையும் சமரசம் செய்ததோடு பழுதாகி நின்ற லாரியை சரி செய்து அப்புறப்படுத்தினர். இதனால் ரயில்வே பீடர் ரோட்டில்அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வாகனங்களை கடந்து செல்ல உதவியால் சில நிமிட தாமதத்திற்கு பிறகு நாகர்கோவில் கோவை எக்ஸ்பிரஸ் நல்லி ரயில்நிலையத்திலிருந்து கிளம்பி சென்றது. இதுபோன்று அடிக்கடி ரயில்வே பீடர் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் இப்பகுதியில் விரைந்து ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.