130 கி.மீ.,வேகத்தில் ரயில்கள் படிக்கட்டு பயணிகள் உஷார்
ஸ்ரீவில்லிபுத்துார்:தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் மணிக்கு 110 முதல் 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்வதால் படிக்கட்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகிறது. தெற்கு ரயில்வே மண்டலத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில் புறப்படும் , வந்து சேரும் நேரங்களில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை சரி செய்து சரியான நேரத்திற்கு ரயில்கள் இயங்க பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகளை தெற்கு ரயில்வே செய்துள்ளது. தண்டவாளம், சிக்னல் முறையை மேம்படுத்தியும், வேக கட்டுப்பாடுகளை அகற்றியும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு வழித்தடங்களில் ரயிலின் வேகம் 110 கி.மீ.யில் இருந்து 130, 100லிருந்து 110, 90லிருந்து 100 கி.மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை உணராத பயணிகள் வாசல்படிகளிலும், பாத்ரூம் வாஷ்பேஷன் அருகிலும் நின்று பயணிக்கும் போது தவறி விழுகின்றனர். ஜூலை 30 மதியம் மதுரையில் இருந்து தென்காசி, கொல்லம் வழியாக குருவாயூர் செல்லும் ரயிலில் பயணித்த விருதுநகரை சேர்ந்த ஹரிஹரன் ராஜபாளையம் அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். ஜூனில் வள்ளியூர் ரயில் நிலையத்தில் 11 வயது மாணவி ரித்திகா தவறி விழுந்து பலியானார். தாம்பரம் போலீஸ்காரர் காத்தவராயன், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும்போது திண்டிவனம் அருகே தவறி விழுந்து பலியானார். ரயிலின் வேகம் அதிகரித்துள்ள நிலையில் படிகட்டு பயணிப்பதை தடுக்க தெற்கு ரயில்வே விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.