பில் கலெக்டர்கள் இடமாற்றம்; வரி வசூல் பாதிக்கும் அபாயம்
விருதுநகர் : தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் வரிக்கு நிர்ணயித்த இலக்கிற்கு வசூலிக்காத 90 பில் கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் வரி வசூலில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.தமிழகத்தில் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள் உள்ளன. இதில் நிர்ணயித்த இலக்கிற்கு வரி வசூலிக்காத பில் கலெக்டர்கள் 90 பேரை பணியிட மாற்றம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 சதவீதம் வரை உயர்த்தி கேட்பு வரி வசூலிக்க நகராட்சிகள் அறிவுறுத்தி வந்தன. ரூ.1 கோடி வசூல் இலக்கு என்றால் ரூ.1 கோடியே 15 லட்சம் வரி வசூலிக்க வேண்டும்.ஊரை விட்டு ஓடி போனவர்கள், வாரிசு பிரச்னை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை நடவடிக்கையால் மூடப்பட்ட ஆலைகளில் வரி வசூல் செய்ய முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் நிர்ணயித்த இலக்கிற்கு வரி வசூல் செய்யவில்லை என பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பொதுவாக பில் கலெக்டர்களுக்கு தான் தெருக்கள், வீடுகள், ஆலைகள், வரி தொடர்பான அனைத்து விஷயங்களும் அத்துபடியாக தெரியும். அவர்கள் திடீரென கூண்டோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.இது வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வரி வசூலில் சுணக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.