நெற்களங்களில் பாதுகாப்பு இன்றி நெல் மூடைகள் சேதம்: கொள்முதல் நிலையங்களில் மண் தரையால் பாதிப்பு
மாவட்டத்தில் அரசு சார்பில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அந்தந்த பகுதி கண்மாய் ஒட்டிய பொது இடங்கள், களங்கள், திறந்தவெளி பகுதி என பெரும்பாலும் மண் தரையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் சுமார் 600 முதல் 800 மூடைகள் வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில் இவற்றிற்கு அருகிலேயே தகுந்த சேமிப்பு கிடங்கு வசதியில்லை.இதனால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூடைகள் தேக்கி வைக்கப்பட்டு லாரிகள் மூலம் தொலைவில் உள்ள கிடங்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நெல் கொள்முதல் மூடைகள் கூலி பிரச்சினை, லாரி கிடைப்பதில் தாமதம், விடுமுறை என பல்வேறு காரணங்களால் கொள்முதல் செய்யும் இடங்களிலேயே தேக்கி வைக்கப்படுகிறது.ஏற்கனவே திறந்த வெளி மண் தரையாக உள்ளதால் மழை நேரங்களில் தார்ப்பாய் மூடி இருந்தும் தரையில் சிமெண்ட் தளம் இல்லாததால் தண்ணீர் தேங்கி அடியில் வைக்கப்படும் நெல் மூடைகள் சேதம் அடைகின்றன. தொடர் மழை காலங்களில் இது போன்ற சிக்கலை தீர்க்க தகுந்த சிமெண்ட், கான்கிரீட் தரை தளம் கொண்ட இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.