விருதுநகரில் மூடப்படாத அடிகுழாய் போர்வெல்கள்: குழந்தைகளுக்கு ஆபத்து
விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதிகளில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்படாத அடிகுழாய் போர்வெல்கள் பெரும் பாலானவை மூடப்படாமல் உள்ளது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது உள்ளே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தேவைக்கு ஏற்ப தனியாக போர்வெல் அமைத்து மோட்டார் பொருத்துகின்றனர். இதன் பயன்பாடு அதிகரித்ததால் அடிகுழாய்களின் தேவை இல்லாமல் போனது. இது போன்று பயன்பாட்டில் இல்லாத அடிகுழாய்கள் துருப்பிடித்து பாழானது. இவற்றை அகற்றிவிட்டு தேவைக்கு ஏற்ப தெரு முனையில் டேங்க் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பழைய அடிகுழாய்களை அகற்றிய இடங்களில் போர் வெல்கள் முறையாக முழுவதும் மூடப்படவில்லை. மாறாக அடிகுழாய் மட்டும் அகற்றப்பட்டு போர்வெல் மீது பெரிய அளவிலான கல்லை மட்டும் வைத்து மறைத்து உள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்குள் மூடப் படாத போர்வெல்களால், அதன் அருகே நின்று விளையாடும் குழந்தைகள் உள்ளே விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் நகராட்சி பகுதியில் பெரும்பாலான இடங்களில் மூடப்படாத நிலையில் உள்ள போர்வெல்களை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.