உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேதமடைந்த கட்டடங்களால் அல்லல்படும் வி.ஏ.ஓ.க்கள்

சேதமடைந்த கட்டடங்களால் அல்லல்படும் வி.ஏ.ஓ.க்கள்

சாத்துார்: சாத்துார் வெம்பக்கோட்டை ஒன்றியங்களில் உள்ள கிராமங்களில் சேதமமான அலுவலகங்களால் வி.ஏ.ஒ.க்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். திருமண சான்று, வாரிசு சான்று, முகவரி மாற்றச் சான்று, இருப்பிடச் சான்று, இறப்பு மற்றும் பிறப்பு சான்றிதழ்கள், வருமானம் சான்று உட்பட விவசாய பணிகளுக்கான பட்டா, சிட்டா, அடங்கள் உள்ளிட்ட சான்றுகள் வி.ஏ.ஓ.க்கள் விசாரித்த பின்னரே வழங்கப்படும்.வருவாய்துறை சார்ந்த எந்த ஒரு சான்றுகளையும் வி.ஏ.ஓ அலுவலகத்திலிருந்து துவங்கி பெறவேண்டிய நிலை உள்ளது. இதனால் கடந்த காலங்களில் கிராமங்களில் தோறும் வி.ஏ.ஓ அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.வி.ஏ.ஓ.க்கள் களப்பணிக்கு செல்வது குறித்தும் திரும்பும் நேரம் குறித்து இந்த அலுவலகத்தில் உள்ள தகவல் கரும்பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.இதனால் கிராம மக்கள் கல்வி மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான வி.ஏ.ஒ.க்களை சந்தித்து மனுக்களை வழங்க வசதியாக இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அலுவலக கட்டடங்கள் தொடர் பராமரிப்பு இல்லாததால் தற்போது கூரை சிதைந்தும் சுவர்கள் பெயர்ந்தும் தரைத்தளம் உடைந்தும் காணப்படுகிறது.இதனால் பல கிராமங்களில் வி.ஏ.ஓ.க்கள் தங்கள் வீடுகளையையே அலுவலகங்களாக பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தனியார் கட்டடங்களை வாடகைக்கு பிடித்து அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர்.சில கிராமங்களில் தற்போதும் ஒழுகும் கூரையுடன் தரை தளம் பெயர்ந்த நிலையில் வி.ஏ.ஓ அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் மக்கள் உட்காருவதற்கு கூட உரிய வசதி இல்லாத நிலை உள்ளது.சிறிய மழை பெய்தாலும் வி.ஏ.ஓ அலுவலகத்தில் பராமரிக்கப்படும் சான்றுகளும் ரசீது புத்தகங்களும் நனைந்து சேதமடையும் நிலை உள்ளது. எனவே கிராமங்களில் உள்ள வி.ஏ.ஓ அலுவலகங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் முற்றிலும் சேதம் அடைந்த அலுவலகங்களை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ