மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது: கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை
மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காலையில் வெயில், மாலையில் மழை, இரவில் பனி என தொடர்ந்து சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. இதனால் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு வைரஸ் காய்ச்சல் பரவுவது அதிகரித்து உள்ளது.இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று நாள்கள் வரை காய்ச்சல் இருப்பதால் சிகிச்சை பெற்றால் மட்டுமே குணமடைகின்றது. ஆனால் பத்து நாட்களுக்கு உடல் வலி, கை, கால் மூட்டு வலி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளது. இதனால் தங்களின் அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் பலரும் வீட்டிலேயே மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வு எடுத்து நீராகார உணவுகளை உட்கொள்கின்றனர். அதன் பின்பே பூரண குணமடைந்து வருகின்றனர்.இந்நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குடியிருப்புகளின் அருகே ஆங்காங்கே காலி இடங்களில் மழை நீர் தேங்கி வருகிறது. இதனால் நீர் தேங்கி நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்து விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி கூறியதாவது: மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் கொதிக்க வைத்து ஆறிய குடிநீர் அருந்த வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் உள்ள குடிநீர் தொட்டிகள், குடங்களை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.வீட்டு கூரையில் வைத்துள்ள பயன்படாத டயர், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டும். கட்டுமான இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.காய்ச்சல், வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, இருமல் ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.