விருதுநகர் மாவட்டம் அதிக தரைப்பாலங்களை கொண்டது அமைச்சர் எ.வ., வேலு பேட்டி
விருதுநகர் : தமிழகத்திலேயே அதிக தரைப்பாலங்களை கொண்டது விருதுநகர் மாவட்டம் என விருதுநகரில் அமைச்சர் எ.வ.,வேலு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் 2033 கி.மீ., ரோடுகள் நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 247 கி.மீ., ரோட்டை ரூ. 261 கோடியில் மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்துள்ளது. 2024 - 2025 நிதியாண்டில் 68 கி.மீ., ரோட்டில் 4 தரைமட்ட பாலம் உட்பட ரூ. 201 கோடியில் பணிகள் தொடர்கிறது. மாவட்டத்தில் 121 கி.மீ., ஊராட்சி ஒன்றிய ரோடுகள் ரூ. 117 கோடியில் இதர மாவட்ட ரோடுகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள 1281 தரைப்பாலங்களை மேல்மட்ட பாலங்களாக உயர்த்தும் பணிகள் நடந்து வருகிறது. மாவட்டத்தில் ரூ. 318 கோடியில் 138 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாககட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதில் மீதமுள்ள 9 பாலங்களும் டிச. 31க்குள் கட்டி முடிக்கப்படும். மாநிலத்திலேயே விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே தரைப்பாலங்கள் அதிகமாக உள்ளது.இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் கிரிவலப்பாதைக்காக ரூ. 30 கோடியில் நடைப்பாதை, தென்திருப்பதி திருவண்ணா மலையில் 2 கி.மீ., கிரிவலப்பாதையை ரூ. 5 கோடியில் அகலப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது.ராஜபாளையத்தில் ரூ. 41 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. சிவகாசி சாட்சியாபுரத்தில் ரூ. 62 கோடியில் பாலம் அமைக்கும் பணி டிச. 31க்குள் முடிக்கப்படும்.திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்காக ரூ. 33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாலம் அமைக்க ரூ. 50 கோடி ஒதுக்கப்படவுள்ளது.அருப்புக்கோட்டையில் ரூ. 119 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் 2 கி.மீ., இணைப்பு ரோடு அமைக்க ரூ. 30 கோடியில் பணிகள் விரைவில் துவங்கப்படும். சிவகாசியில் மூன்று கட்டங்களாக 35 கி.மீ., புறவழிச்சாலை அமைக்கப்படும். இதில் முதல்கட்டமாக 10 கி.மீ., புறவழிச்சாலை அமைக்க ரூ. 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்காக 70 சதவித நில எடுப்பு பணிகள் முடிந்துள்ளது. மல்லாங்கிணர், வத்திராயிருப்பில் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.விருதுநகர் சிப்காட்டில் 2 கி.மீ., ரூ. 27 கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் இரண்டு மாதத்தில் முடிக்கப்படும்.அருப்புக்கோட்டையில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ரூ. 30 கோடியில் தரைதளம், ஆறுதளங்கள் கட்டப்பட்டு வருகிறது. ராஜபாளையத்தில் அரசு மருத்துவமனை பணிகள் ரூ. 40 கோடியில் நடந்து வருகிறது.விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் இரண்டு கட்ட பணிகள் ரூ. 475 கோடியில் நடக்கவுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு ஓராண்டிற்கு ரூ. 17 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அறிவித்த பணிகளை தி.மு.க., அரசு நிறைவேற்றி வருகிறது. இந்த ஆண்டு விபத்துக்களை குறைப்பதற்காக ரோடு சந்திப்புகளை மேம்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.