உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிகிச்சையில் பாதிப்பு: பெண்ணிற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

சிகிச்சையில் பாதிப்பு: பெண்ணிற்கு இழப்பீடு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விருதுநகர் அரசு மருத்துவமனையில் கவனக்குறைவான சிகிச்சையால் ஒரு காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இழப்பீடு கோரியும் பெண் தாக்கல் செய்த வழக்கில், ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தாக்கல் செய்த மனு: எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் 2019 மே 2 ல் கருப்பை அகற்றப்பட்டது. மயக்க நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு வந்தபின் வலது காலில் வலி ஏற்பட்டது. டாக்டர்களிடம் தெரிவித்தேன். கால் வலிக்கு சிகிச்சை அளிக்கவில்லை. வலி அதிகரித்தது. தனியார் ஸ்கேன் சென்டரில் பரிசோதனை நடந்தது. மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு தலைமை டாக்டர் வந்து என்னை பரிசோதித்தார். அங்கு என்னை மாற்றுமாறு அறிவுறுத்தினார். வலது காலில் ரத்தம் உறைந்தது; ரத்த ஓட்டம் தடைபட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் எனது வலது கால் அகற்றப்பட்டது. என்னால் நடக்கவோ, நிற்கவோ முடியவில்லை. விருதுநகர் அரசு மருத்துவமனையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்திருந்தால், எனது வலது காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அங்கு சிகிச்சை அளித்ததில் கவனக்குறைவு ஏற்பட்டதால் எனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன்: சிகிச்சையின்போது ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களுக்கு இழப்பீடு வழங்க தொகுப்பு நிதியை சுகாதாரத்துறை உருவாக்கியுள்ளது. அதன்படி மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ