குடிநீர் பற்றாக்குறை, தெருக்களில் ரோடு சேதம்
சிவகாசி, : சிவகாசி அருகே தேவர்குளம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை, தெருக்களில் ரோடு சேதம், குப்பைகளை அகற்றாததால் சுகாதாரக் கேடு என எண்ணற்ற பிரச்னைகளால் மக்கள் சிக்கித் தவிக் கின்றனர். ஹவுசிங் போர்டு, சக்தி நகர், குரு காலனி, இ.பி., காலனி, லட்சுமி நகர், எழில் நகர், விஸ்வம் நகர், எல்.ஐ.சி.,நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தேவர்குளம் ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறை, தெருக்களில் ரோடு சேதம் முக்கிய பிரச்னையாக உள்ளது. குழாய் பதித்ததாகவும் தெருவிளக்குகள் அமைத்ததாகவும் எந்த வேலையும் நடைபெறாமலேயே பில் மட்டும் எடுக்கப்படுகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொழிற்பேட்டை அருகே ஸ்ரீவில்லிபுத்துார் செல்லும் ரோட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை கொட்டுவதற்காக தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இதில் கொட்டப்படும் குப்பைகள் அகற்றப்படாமல் அங்கேயே தீ வைத்து எரிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை எழும்பி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும் டூவீலர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதே போல் கங்கா குளம் செல்லும் ரோட்டிலும் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட குப்பைகள் அங்கேயே வைத்து எரிக்கப்படுகிறது. ஹவுசிங் போர்டு, சக்தி நகர் குரு காலனி இ.பி., காலனி ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு, குடியிருப்பு பகுதிகளில் அதிக அளவில் நாய்கள் நடமாடுகின்றன. ஊராட்சி அலுவலகம் அருகே ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அம்மா பூங்கா என்ற பெயரில் சிறுவர் பூங்கா துவக்கப்பட்டது. இதில் சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சில ஆண்டுகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்த இந்தப் பூங்கா தற்போது சிதைந்து விட்டது. இங்குள்ள ஊஞ்சல், சறுக்கு போன்ற விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து விட்டது. சக்தி நகர், அம்மன் நகர் பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஆண்டிற்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதாக்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்து வீடுகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்காமல் அப்பகுதியினருக்கு இதுவரையிலும் குடிநீர் வினியோகம் செல்லவில்லை. பஸ் ஸ்டாப் அருகே ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் கழிவுநீர் தேங்கியுள்ளது. ஹரிஹரசுதன், தனியார் ஊழியர்: ஊராட்சி முழுவதுமே குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே ஊராட்சி முழுவதுமே சீரான குடிநீர் வினியோகம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குருமூர்த்தி ராஜா, ஆட்டோ கேரேஜ்: ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு, எல்.ஐ.சி., நகர், ஸ்ரீவில்லிபுத்துார் ரோடு, பஸ் ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை. குப்பைகள் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக காணப்படுகிறது. இதனால் ஊராட்சி முழுவதும் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அய்யப்பன், மெக்கானிக்: ஊராட்சியில் ஹவுசிங் போர்டு, எல்.ஐ.சி., நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருக்களில் ரோடு மிகவும் மோசமாக சேதம் அடைந்துள்ளது. சிறிய மழை பெய்தாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே அனைத்து தெருக்களிலும் சேதமடைந்த ரோடுகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.