கண்மாய் காப்போம் செய்தி
சாத்துார்: சாத்துார் அயன் சத்திரப் பட்டி கண் மாயில் ழுதான மதகு, ஆக்ரமிப்பில் நீர் வரத்து ஓடை, போன்றவற்றால் 20 ஆண்டுகளாக கண்மாய் நிரம்பாமல் உள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். சாத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட அயன் சத்திரப்பட்டி கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாக கண்மாய் பராமரிக்கப்படாததால் கண்மாயின் கரை பகுதிகளில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளது.கண்மாய் பாசனத்தின் மூலம் 100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்த நிலையில் தற்போது 35 ஏக்கர் பரப்பளவு மட்டுமே விவசாயம் நடைபெற்று வருகிறது.சாத்துார் வெங்கடாஜலபதி கோயிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களும் இந்த கண்மாய் நீர் பாசனத்தின் மூலம் நீர்ப்பாசனம் பெற்று வருகின்ற நிலையில் 20 ஆண்டுகளாக கண்மாய் முழுமையாக நிரம்பாததால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.சத்திரப்பட்டி, சடையம்பட்டி, சின்ன கொல்லப்பட்டி, ஒத்தையால், ஒ.மேட்டுப்பட்டி, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் இந்த பகுதியில் நிலம் வைத்து விவசாய பணிகளை செய்து வருகின்றனர்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கண்மாயில் கண்துடைப்பாக குடி மராமத்து பணி நடந்தது. அப்பொழுது கண்மாயை மட்டும் ஆழப்படுத்திவிட்டு கரையை பலப்படுத்தாமல் விட்டு விட்டனர்.இதன் காரணமாக கண்மாயின் கரை பகுதியில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. கனமழை பெய்து கண்மாய்க்கு வரும் தண்ணீர் இந்த உடைப்பு வழியாக வீணாக வெளியேறி வருகிறது.விவசாய பணிக்கு தேவையான தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். தற்போது கிணற்று பாசனத்தின் மூலம் சிறிதளவு விவசாயப் பணிகளை விவசாயிகள் செய்து வருகின்றனர்மக்காச்சோளம் பருத்தி காய்கறிகள் சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களை விளைவித்து வருகின்றனர். நெல் விளைந்த பூமி தற்போது தண்ணீர் வீணாகி வருவதால் போதுமான தண்ணீர் பாய்ச்ச முடியாததால் பிற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். மதகு பழுதானதால் பாதிப்பு
ராமமூர்த்தி, விவசாயி: சத்திரப் பட்டி கண்மாயில் 3 மதகுகள் உள்ளன.கண்மாய் முழுதாக நிரம்பினால் இந்தப் பகுதியில் நெல் விவசாயம் சிறப்பாக இருக்கும். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் கண்மாய்க்கு ஓரளவு தண்ணீர் வந்தது, இதை வைத்து இந்த ஆண்டு நெல் பயிர் செய்தோம். இரண்டு மதகுகளின் ஷட்டர்கள் பழுதாகி உள்ளது.இந்த மதகுகள் வழியாக தண்ணீர் வீணாக வெளியேறியதால் நெல்பயிருக்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. மதகுகளை சரி செய்ய வேண்டும். உடைந்த கரைகள்
கந்தசாமி, விவசாயி: கண்மாயில் மதகுகள் நீர்பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளது. ஊராட்சியில் மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. கரையில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பலத்த மழை பெய்து வரும் தண்ணீர் பழுதான ஷட்டர் மூலமும் உடைந்த கரை வழியாகவும் வீணாக வெளியேறி வருகிறது. ஆழத்தோடு, அகலமும் தேவை
சண்முகராஜ், விவசாயி: கண்மாயில் அதிகளவு வண்டல் மண் சேர்ந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாயை ஆழப்படுத்தினார்களே தவிர அகலப்படுத்தவில்லை. 100 ஏக்கர் பரப்பளவு தண்ணீர் தேங்கும். தற்போது விவசாய பணிகளுக்கு கண்மாயில் உள்ள வண்டல் மண்ணை எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி அளித்தால் கண்ணா மாயை ஆழப்படுத்துவதோடு அகலப்படுத்தவும் வசதியாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அதிகம்
பாண்டியன், விவசாயி: சடையம்பட்டி கண்மாயில் இருந்து வரும் மழை நீர் வரத்து ஓடை முழுவதும் தனியாரால் மணல் கொட்டப்பட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக கண்மாய்க்கு முழுமையாக தண்ணீர் வருவதில்லை. காட்டுப் பகுதியில் சென்று சேர்ந்து வீணாகி விடுகிறது. சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள ஆலை கழிவுகள் கண்மாய் நீர் வரத்து ஓடையில் கலப்பதால் தண்ணீர் மாசு அடைந்த நிலையில் உள்ளது. நீர்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வர வைக்க வேண்டும்.