மாணவர்களுக்கு மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எப்போது
விருதுநகர்; விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் மது போதையில் மாணவர்கள் இருவர் அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய விவகாரத்தில், மாணவர்களுக்கு மது விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலை பள்ளியில் மது அருந்தி வந்த மாணவர்களை கண்டித்தபோது தாக்கியதில் ஆசிரியர் சண்முக சுந்தரம் காயமடைந்தார். மாணவர்கள் இருவரும் போதையில் இருந்தது உறுதியானதால் கைதும் செய்யப்பட்டனர். 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது வழங்க கூடாது என சட்டம் உள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு மது கிடைத்துள்ளது. அதை வழங்கியது யார் என விசாரணை நடக்கவில்லை. இப்பள்ளி பகுதியில் டாஸ்மாக் கடை, கஞ்சா புழக்கம் உள்ளது. இதே பள்ளியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆசிரியர் ஒருவரை மாணவர் கத்தியால் குத்தியது குறிப்பிடத்தக்கது. தடை இருந்தும் சிறுவர்களுக்கு மது கிடைக்கிறது. சில டாஸ்மாக் கடைகளில் இவர்களுக்கு விற்கின்றனர். அதை தடுக்க வேண்டும். இந்த சம்பவத்தில் மாணவர்களுக்கு மது கிடைத்தது எப்படி, கடைகளில் விற்றிருந்தால் அவர்கள் மீதும், வேறு யாரும் வாங்கி இவர்களுக்கு கொடுத்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக்கை உடனடியாக அகற்ற வேண்டும் என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.