உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க வாகனங்கள் ஏன் வாங்க வில்லை

பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க வாகனங்கள் ஏன் வாங்க வில்லை

விருதுநகர்: விருதுநகர் நகராட்சி பகுதியில் ஏராளமான இடங்களில் பாதாள சாக்கடை அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. அதை நீக்கத் தேவையான வாகனங்களை ஏன் வாங்கவில்லையென நகராட்சி கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். விருதுநகர் நகராட்சியின் சாதாரண, அவசரக் கூட்டம் தலைவர் மாதவன் தலைமையில் நடந்தது. கமிஷனர் சுகந்தி, பொறியாளர் எட்வின்பிரைட்ஜோஸ், துணைத் தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஏற்பட்ட விவாதம் பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனங்கள், மண் அள்ளும் வாகனங்கள் ஆகியவை பழுதாகி உள்ளன. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. அடைப்பு நீக்க வெளியூரில் இருந்து வாகனங்களை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏன் விருதுநகர் நகராட்சிக்கு வாகனங்களை வாங்கவில்லை என கவுன்சிலர்கள் முத்துலெட்சுமி, சுல்தான் அலாவூதீன், ஜெயக்குமார், சரவணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஒரு மாதத்தில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைவர், பொறியாளர் உறுதியளித்தனர். மதியழகன் (தி.மு.க.,): தெரு நாய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காளி (சுகாதார ஆய்வாளர்): உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாய்களுக்கு கருத்தடை செய்யப்படும். 150 நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது. கலையரசன் (தி.மு.க.,): தாமிரபரணி குடிநீர்த் திட்ட பணிகள் சரிவர நடைபெறவில்லை. தோண்டப்பட்ட சாலையை சீரமைக்கவில்லை. உமாராணி (தி.மு.க.,): உள்தெரு, பஜார் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதை அகற்ற வேண்டும். ஜெயக்குமார் (மார்க்சிஸ்ட்): வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் சொத்து வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது. அதை குறைக்கக்கோரி நகராட்சியில் மனு அளிக்கப்பட்டது. ஒரு வருடம் ஆகியும் எவ்வித பதிலும் தரவில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி