போக்குவரத்துக்கழக பணிமனைகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுமா
விருதுநகர்:தமிழக அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் 40 வயதை கடந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் உடல்நலக்கோளாறுகளை கண்டறிய மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இப்பணிமனைகளில் டிரைவர், கண்டக்டர், டெக்னீசியன் உட்பட பல்வேறு பணிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் 40 வயதை கடந்தவர்களாக இருப்பதால் பலருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது.நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கிட்டபார்வை, துாரப்பார்வை, கண்புரை பாதிப்புகள் குறித்து தொழிலாளர்கள் பெரிய அளவில் பரிசோதனை எதுவும் செய்து கொள்வதில்லை. மாறாக பாதிப்புகள் அதிகரித்து உடலில் பிரச்னை ஏற்படும் போது தான் மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை, சிகிச்சை எடுத்துக்கொள்கின்றனர்.இதனால் பாதிப்பு அதிகமாகிறது. இந்நிலையை மாற்ற அனைத்து பணிமனைகளிலும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவ முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு செய்தால் பாதிப்புகள் முன்கூட்டியே கண்டறியப்பட்டு தொழிலாளர்களின் நலன் காக்க முடியும்.அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டல பொதுச்செயலாளர் போஸ் கூறியதாவது: பணிமனைகளில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டும் கண்சிகிச்சை முகாம் பெயரளவில் நடத்தப்படுகிறது. ஆனால் பொது மருத்துவ முகாம் நடத்தப்படுவதில்லை. மேலும் ஓய்வு பெறுபவர்களுக்கு அடுத்த மாதத்தில் இருந்து மருத்துவ செலவுக்கான பிடித்தம் நிறுத்தப்படுகிறது. எனவே போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பொது மருத்துவ முகாம் பணிமனைகளில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.