ஊரக நுாலகங்கள் விமோசனம் பெறுமா பல ஆண்டுகளாய் முடங்கி கிடக்கும் அவலம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஊரக நுாலகங்கள் பல ஆண்டுகளாய் முடங்கி கிடக்கும் அவலம் தொடர்வதால் இதற்கொரு விமோசனம் கிடைக்காதா என மக்கள் ஏங்குகின்றனர்.மாவட்டத்தில் கிளை நுாலகங்கள் 88, மாவட்ட மைய நுாலகம் 1, முழுநேர நுாலகங்கள்(தாலுகா) 13, ஊர்ப்புற நுாலகங்கள் 56 என 158 நுாலகங்கள் உள்ளன. இவற்றில் நுாலகத்துறை கீழ் இயங்கும் முழுநேர, கிளை நுாலகங்கள் ஊர்ப்புறங்களில் இருந்தாலும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட ஊர்ப்புற நுாலகங்கள் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதற்கு நுாலகர்கள் உண்டா, இங்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா என எதுவும் தெரியாத நிலை உள்ளது.கிராம மக்கள் தங்கள் அறிவை மேம்படுத்தவும், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நகர்ப்பகுதி வரை அலைக்கழிக்கப்படாமல் இருப்பதற்கே கிராம அளவில் நுாலகங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் அனைத்து ஊர்ப்புற நுாலகங்களும் முடங்கி கிடக்கின்றன.இதனால் எல்லா மாணவர்களும் தாலுகா, மைய நுாலகங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் கிராமப்புற நுாலகம் கொண்டுவரப்பட்ட நோக்கமே சிதைந்து விட்டது. மாவட்ட நிர்வாகம் இது போல் முடங்கி கிடக்கும் நுாலகங்களை கணக்கெடுத்து இவற்றை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.