உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தற்போதே அமலாகுமா ஈட்டிய விடுப்பு பணப்பலன் திட்டம்

தற்போதே அமலாகுமா ஈட்டிய விடுப்பு பணப்பலன் திட்டம்

ஸ்ரீவில்லிபுத்துார்:தமிழகத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் திட்டம் 2026ல் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்து, தற்போதே நடப்பாண்டிலேயே அதை வழங்குவதற்கு பட்ஜெட் பதிலுரையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்களிடம் எழுந்துள்ளது.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது. இதில் 15 நாட்களை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை பல ஆண்டுகளாக அமலில் இருந்தது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி, திருமணம், மருத்துவ செலவினங்களுக்கு பயனாக இருந்தது.இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு ஏற்பட்ட கடும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெறும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு அரசு ஊழியர்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்படாததால் தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.இந்நிலையில் 2026 ஏப்., முதல் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2026 மார்ச் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைமுறைகள் துவங்கி விடும். இதனால் நடப்பாண்டிலேயே இதை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர்.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெறும் திட்டமும் தள்ளிப்போவது அரசு ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியும் உள்ளது.எனவே தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில் ஏப்., 29, 30ல் பட்ஜெட் பதிலுரையில் முதல்வர் ஸ்டாலின் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணப்பலன் பெறும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ