உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பல லட்சம் ரூபாயில் புனரமைத்த கிராம நுாலகங்கள் செயல்படுமா: போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் வேதனை

பல லட்சம் ரூபாயில் புனரமைத்த கிராம நுாலகங்கள் செயல்படுமா: போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் வேதனை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சிகள் தோறும் பல லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்களை சரிவர செயல்படாததால், போட்டி தேர்வுக்கு தயராகி வரும் இளைஞர்கள் வேதனையடைந்துள்ளனர்.நுாலகங்கள் திறக்கப்பட்டால் சிறைச்சாலைகள் மூடப்படும் என அறிஞர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக கடந்த காலங்களில் தமிழக அரசு ஊராட்சிகள் தோறும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நுாலக கட்டடங்களை கட்டி பல லட்சம் மதிப்பிலான நுால்களையும் இலவசமாக வழங்கியது. மேலும் ஊராட்சிகள் தோறும் அமைக்கப்பட்ட நுாலகங்களை திறந்து பராமரிப்பதற்காக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அல்லது பகுதி நேர ஊழியரை நியமித்து காலை, மாலை இரு நேரமும் திறந்து வாசகர்களை படிக்க வைக்க அரசு அறிவுறுத்தியது. ஆனால் ஊராட்சி நிர்வாகத்தில் வந்த ஊராட்சி தலைவர்கள், செயலர்கள் இதில் போதுமான அக்கறை காட்டாததால் இந்த திட்டம் படுதோல்வி அடைந்தது. இதனால் பல ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நுாலக கட்டடங்கள் சேதமடைந்தும் நுால்கள் கரையான்கள் அரித்து வீணாகி விட்டது. 2022- -2023 ம் ஆண்டுகளில் தமிழக அரசு மீண்டும் அனைத்து கிராம நுாலகங்களை சீரமைப்பதற்கும் ஒவ்வொரு நுாலகத்திற்கும் ரூ.6 முதல் 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டது. கட்டடம் சீரமைக்கப்பட்டாலும் வழக்கம் போல நுாலகம் திறப்பது மட்டும் நடைபெறவில்லை.இதனால் பல லட்சம் ரூபாய் செலவழித்து சீரமைக்கப்பட்ட நுாலக கட்டிடங்கள் தற்போது காட்சி பொருளாக உள்ளன. ஊராட்சிகளில் போட்டி தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் பொழுது போக்குவதற்காக உருவாக்கப்பட்ட நுாலக கட்டடங்கள் வீணாகி வருவது மக்களுக்கு வேதனை தருகிறது. எனவே சீரமைக்கப்பட்ட நுாலக கட்டடங்களை ஊராட்சி பகுதியில் விரைந்து செயல்பாட்டில் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை