சென்னை:''பழங்குடியினர் என, போலி ஜாதிச் சான்றிதழ் பெற்று, மத்திய, மாநில அரசுப் பணிகளில், 30 சதவீதம் பேர் பணியாற்றி வருவதாக, கண்டறியப்பட்டுள்ளது. மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, முழுமையாக விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களை அரசுப் பணிகளில் இருந்து நீக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, தே.மு.தி.க., உறுப்பினர் சாந்தி வலியுறுத்தினார்.சட்டசபையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையில், சாந்தி பேசியதாவது:தமிழகத்தில், பழங்குடியினர் பட்டியலில், 36 வகை இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நிலங்கள், பல்வேறு தேவைகளுக்காக கையகப்படுத்தப்படுகின்றன.
பழங்குடியினருக்கான உப்பிலியாபுரம் சட்டசபை தொகுதியை, தொகுதி மறு சீரமைப்பில் இழந்துள்ளோம். அதனால், சட்டசபையில் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, மூன்றில் இருந்து இரண்டாக குறைந்துள்ளது.நடப்பாண்டில் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சரியாக நடத்தி, மீண்டும் மூன்று தொகுதிகள் கிடைக்க, முதல்வர் வழி செய்ய வேண்டும். பழங்குடியினருக்கென ஒரு லோக்சபா தொகுதியை ஒதுக்க, மத்திய அரசை முதல்வர் வலியுறுத்த வேண்டும்.'மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பழங்குடியினர் என, போலி ஜாதிச் சான்றிதழ் பெற்று, 30 சதவீதம் பேர் பணியாற்றி வருகின்றனர்' என, சுப்ரீம் கோர்ட்டும், தேசிய பழங்குடியினர் நல ஆணையமும் தெரிவித்துள்ளன.இது குறித்து, முந்தைய ஆட்சியாளர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மூன்று நபர்கள் அடங்கிய குழுவை அமைத்து, உரிய விசாரணை நடத்தி, போலி ஜாதிச் சான்றிதழ் மூலம் அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களை, வேலையில் இருந்து நீக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொல்லிமலையில் மூலிகைப் பண்ணை அமைக்கவும், கொல்லிமலையை தனி தாலுகாவாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சாந்தி பேசினார்.வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி குறுக்கிட்டு பேசும்போது, 'கொல்லிமலையை தனி தாலுகாவாக அறிவிக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.