சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவியை மா.கம்யூ.,விற்கு கட்சித் தலைமை விட்டுக் கொடுத்ததைக் கண்டித்து, தே.மு.தி.க.,வினர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இன்றி அ.தி.மு.க., - தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., கட்சிகள் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்தன. ஆனால், மா.கம்யூ., திடீரென தே.மு.தி.க.,வுடன் பேச்சு நடத்தி, கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டணி முடிவுக்கு முன்னரே, சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட தே.மு.தி.க., வேட்பாளர் மங்கையர்கரசி நேற்று மாவட்டச் செயலர் சபா சசிக்குமார் முன்னிலையில், மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, தே.மு.தி.க., தலைமை, சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவியை, மா.கம்யூ.,விற்கு விட்டுக் கொடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரம் தே.மு.தி.க.,வினர், மாவட்ட துணைச் செயலர் பாலு தலைமையில், நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திரண்டு, சபாநாயகர் தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டனர். மாவட்டச் செயலர் சபா சசிக்குமாரிடம், தலைமையிடம் நகராட்சித் தலைவர் பதவியை கேட்டுப் பெறாமல், சுயநலத்திற்காக விட்டுக் கொடுத்து விட்டீர்கள். உங்களால் கட்சிக்கு அவமானம் என, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை நெட்டித் தள்ளினர். இதனால், அங்கு பதட்டம் நிலவியது. தகவலறிந்த போலீசார், விரைந்து சென்று சமரசம் செய்தனர். பின்னர், பஸ் நிலையம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை; மீறினால் கைது செய்வோம் என, போலீசார் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து, கட்சியினர் கோஷமிட்டபடி மீண்டும் கட்சி அலுவலகம் வந்து, சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் செய்ததையடுத்து, 10 நிமிடங்களில் மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவம் சிதம்பரம் பகுதியில், திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.