உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கட்டடங்களை மாற்றியமைக்க உத்தரவிடப்படும்

மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் கட்டடங்களை மாற்றியமைக்க உத்தரவிடப்படும்

சென்னை: ''அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், மாற்றுத் திறனாளிகள் உபயோகிக்கும் வகையில், உடனே மாற்றங்கள் செய்ய, நகராட்சி கட்டட விதிகள், உள்ளாட்சி கட்டட விதிகளில் மாற்றம் செய்யப்படும்'' என, சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் தெரிவித்தார்.

சமூக நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் துறை மீது நடந்த விவாதத்துக்கு, அமைச்சர் செல்வி ராமஜெயம் அளித்த பதில்: மாற்றுத் திறனாளிகள், பல்வேறு பொதுக் கட்டடங்களுக்குச் செல்லும் போது, அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் களைய, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் தனியார் மற்றும் அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தளங்கள், லிப்ட் போன்றவை இருக்க வேண்டுமென்ற சட்டத்தை, 2003ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார். அதன்படி, சாய்வு தளங்கள், கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ப அமைத்தால் தான், கட்டட அனுமதி வழங்கப்படுமென உத்தரவிடப்பட்டது. அடுத்து வந்த தி.மு.க., அரசு, தமிழகத்தின் மற்ற பகுதிகளில், இச்சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வர, எந்த முயற்சியும் செய்யவில்லை.

மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு, அரசு கட்டடங்கள், பொது இடங்கள், பஸ் நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், உடனே மாற்றம் செய்ய, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டமைப்புகளில், இவற்றை செயல்படுத்தும் வகையில், சிறப்பு அனுமதி பெற, சட்டம் கொண்டு வர உள்ளார். அதனடிப்படையில், நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை கட்டட விதிகளில் மாற்றம் செய்து, விரைவில் அரசாணை வெளியிடப்படும். மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, கடந்த ஆட்சியில், மாற்றுத் திறனாளிகள் நல வாரியம் ஒன்றை, 2007ம் ஆண்டு அமைத்தனர். அந்த வாரியத்தை, 2010ல் திருத்தி அமைத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியைத் தலைவராகவும், அவரது மகள் கனிமொழியை ஆலோசகராகவும் நியமித்தனர். இதன்மூலம், அவர்களின் பதவி ஆசை மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தையும் விட்டு வைக்கவில்லை என்று தெரிகிறது. அவ்வாறு திருத்தி அமைக்கப்பட்ட நல வாரியம், ஒரே ஒரு முறை தான் கூடியது. அதுவும் சுய விளம்பரத்துக்காக கூட்டப்பட்டது. அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை கூட சரிவர செலவிடப்படவில்லை. இயங்காமல் உள்ள அந்த வாரியத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது.

கடந்த ஆட்சியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக, ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதி கடைசி வரை, சரிவர செலவிடப்படவில்லை. மாற்றுத் திறனாளிகள் திருமண நிதி உதவிக்கு, எவ்வளவு விண்ணப்பங்கள் வந்தாலும், அனைத்துத் தகுதியுள்ள விண்ணப்பங்களுக்கும் திருமண நிதியுதவியும், நான்கு கிராம் தங்கமும் வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு, அமைச்சர் செல்வி ராமஜெயம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை