| ADDED : ஆக 01, 2011 11:26 PM
தேனி: சபரிமலை ஐயப்பன் கோயில் விழா பாதுகாப்பு குறித்து, கேரள அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
கடந்த ஜனவரி மாதம், சபரிமலையில் மகரஜோதி பார்த்து விட்டு திரும்பிய ஐயப்ப பக்தர்கள் 102 பேர், புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியாகினர். இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்து ஆலோசனை கூட்டம், இடுக்கி கலெக்டர் தேவதாஸ் தலைமையில் தேக்கடியில் நடந்தது. எஸ்.பி., ஜோய் வர்க்கீஸ், பி.டி.தாமஸ் எம்.பி., மற்றும் வருவாய்த்துறை, போலீஸ்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வண்டிப்பெரியார், குமுளி, புல்மேடு பகுதிகளில் எவ்வளவு போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்துவது, புல்மேட்டிற்கு வாகனங்கள் செல்ல தடை விதிப்பது, குமுளி- முண்டக்கயம் ரோட்டை சீரமைப்பது, வண்டிப்பெரியாரில் உள்ள பழைய பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்டுவது, வண்டிப்பெரியாரில் இருந்து சத்திரம் வழியாக சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். வரும் செப்., 3 ல் மீண்டும் ஆலோசனை கூட்டம் நடத்துவது, பக்தர்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் உட்பட பக்கத்து மாநில அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பது உட்பட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.