திண்டுக்கல்: மில் உரிமையாளரை மிரட்டி 165 ஏக்கரை பறித்ததாக, சன் பிக்சர்ஸ் நிர்வா அதிகாரி சக்சேனாவின் கூட்டாளி ஐயப்பன் உட்பட 13 பேர் மீது, திண்டுக்கல்லில் வழக்கு பதியப்பட்டது.
உடுமலைபேட்டை காந்திநகர் சீனிவாசன், ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார். இவருக்கு திண்டுக்கல் மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தில் 165 ஏக்கர் உள்ளது. சினிமா வினியோகிஸ்தராகவும் இருந்தார். இதில் ஐயப்பனுடன் பழக்கம் ஏற்பட்டது. சில நாட்களில், 165 ஏக்கரை தனக்கு விற்கும்படி கேட்டார். தர மறுத்ததால், அப்போதைய ஆளுங்கட்சியினர் உதவியுடன், கோயம்புத்தூரில் பொய் புகார் கொடுத்தார். இதில் சீனிவாசன், பங்குதாரர்கள் வெங்கடாஜலபதி, செல்வக்குமார் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்த போது, உடுமலை மில்லில் புகுந்த ஐயப்பன், நிலம் உட்பட சில ஆவணங்களை எடுத்துச்சென்றார். சிறையில் இருந்து வந்த சீனிவாசன், ஆவணங்களை தருமாறு கேட்டார். நிலத்தை எழுதி கொடுத்தால், பிற ஆவணங்களை தருவதாக ஐயப்பன் மிரட்டினார். இதன்படி, நிலத்தை அவரது பெயருக்கு மாற்றிக் கொண்டார். பிற ஆவணங்களையும் தரவில்லை. கரூர் குணசீலன், திருப்பரங்குன்றம் கார்மேகம், மதுரை முத்துராமலிங்கபுரம் முத்துக்குமார், சரவணன், ஆனந்த், ஈரோடு சம்பத்குமார், ஒட்டன்சத்திரம் பொட்டிகாம்பாளையம் பழனிச்சாமி உட்பட 13 பேர் ஐயப்பனுக்கு உடந்தையாக இருந்தனர். திண்டுக்கல் எஸ்.பி., சந்திரசேகரனிடம், சீனிவாசன் புகார் அளித்தார். இதன்படி, வழக்கு பதியப்பட்டு, சம்பத்குமார் கைது செய்யப்பட்டார். ஐயப்பன் சில வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளார்.