| ADDED : செப் 22, 2011 02:09 AM
செங்கல்பட்டு:'கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது' என, கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் சுபாஷ் சந்திர சேத்தல் தெரிவித்தார்.எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகத்தில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஜப்பானில் அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுகிறது. அங்கு 1886ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது, 150 மீட்டர் உயரத்திற்கும், 1896ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின்போது 110 மீட்டர் உயரத்திற்கும், கடல் நீர் உயர்ந்ததாக வரலாறு கூறுகிறது. 2004ம் ஆண்டு நம் நாட்டில் சுனாமி ஏற்பட்ட போது, 4.7 மீட்டர் உயரத்திற்கு கடல்நீர் உயர்ந்தது. அப்போது, கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்களால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது. உலகில் 430 அணுமின் நிலையங்கள் உள்ளன. அமெரிக்காவிலும், பிரான்சிலும் அதிகமாக உள்ளன. இந்தியாவில் அணு மின்சார உற்பத்தி 3 சதவீதம் உள்ளது. இங்கு 40 சதவீத மக்களுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. கல்பாக்கத்தில் 2003ம் ஆண்டு துவக்கப்பட்ட பாவினி அணுமின் திட்டப் பணிகள் முடிந்து, அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு சுபாஷ் சந்திர சேத்தல் தெரிவித்தார்.