சி.பி.எஸ்.இ., கேள்வித்தாளைப் போல், சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளதால், விடை அளிக்கக் கூடுதல் நேரம் தேவைப்படலாம் என்ற கருத்து எழுந்துள்ளது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, இரண்டரை மணி நேரம் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பில், பழைய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட கேள்வித்தாள், இரண்டரை மணி நேரத்தில் விடை எழுதும் வகையில் இருந்தது.வரும் மார்ச்சில் நடக்கவுள்ள பொதுத்தேர்வில், சி.பி.எஸ்.இ., பாணியில் அமைக்கப்பட்ட கேள்வித்தாள் அறிமுகப்படுத்தப்படும். இதில், மாணவர்கள் சிந்தித்துத் தேர்வெழுதும் வகையில், நுணுக்கமான கேள்விகள் இடம் பெறும். அதனால், தற்போதுள்ள இரண்டரை மணி நேரத்தில், பொதுத்தேர்வை எழுதி முடிப்பது சிரமமாக இருக்கும் என்று, ஆசிரியர்களும், மாணவர்களும் கருதுகின்றனர்.சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்புத் தேர்வில், விடை எழுதுவதற்கென மூன்று மணி நேரம், தவிர கேள்விகளைப் புரிந்துகொள்வதற்குக் கூடுதலாக 15 நிமிடம் வழங்கப்படுகிறது.இது குறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:கேள்வித்தாளைப் படித்துப் புரிந்து கொள்ள 10 நிமிடம், விடைத்தாளில் பதிவெண்கள் உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்தி செய்ய 5 நிமிடம் என, இரண்டரை மணி நேரம் இல்லாமல், கூடுதலாக 15 நிமிடம் தரப்படுகிறது.காலை 10 மணிக்குள், தேர்வு அறைக்குள் மாணவர்கள் அமர்ந்ததும், 10 மணி முதல் 10.15 வரை, கேள்வித்தாளைப் படிக்கவும், விடைத்தாளில் உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்யவும் நேரம் வழங்கப்படுகிறது.விடை எழுதுவதற்கான இரண்டரை மணி நேரம், 10.15க்கு துவங்கி 12.45க்கு முடிகிறது. எனவே, இரண்டரை மணி நேரத்தில் விடை அளிக்க முடியும்.எனினும், புதிய பாடத் திட்டத்தின் கீழ், தேர்வுகள் நடக்கும்போது தான், நேரம் பற்றாக்குறை பிரச்னை இருக்கிறதா என்பது தெரிய வரும். மாநில அளவில், பெரும்பான்மையான மாணவர்களுக்கு, நேரப் பற்றாக்குறை பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டால், அப்போது அந்தப் பிரச்னை, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, உரிய முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.சி.பி.எஸ்.இ., கேள்வித்தாளைப் பின்பற்றும் அதே நேரத்தில், தேர்வு நேர விவகாரத்திலும், சி.பி.எஸ்.இ.,யில் உள்ளபடி, மூன்று மணி நேரம் வழங்குவதே நியாயமானதாக இருக்கும் என்று, ஆசிரியர்கள் கருதுகின்றனர்.-ஏ.சங்கரன்-