மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
1 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
4 hour(s) ago | 31
கோவை : இப்படியும் கூட ஏமாறுவரா...' என்பது தான், நடந்ததை கேள்விப்பட்ட அனைவரும், தனக்குத்தானே கேட்டுக்கொண்ட முதல் கேள்வியாக இருந்தது. அப்படியொரு சம்பவம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது.
திருப்பூர், வீரபாண்டி பிரிவில் வசிப்பவர் தண்டபாணி, 35; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அதே பகுதியில், அபார்ட்மென்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், அங்கு சென்ற ஒருவர், தண்டபாணி தாயார் நல்லம்மாளிடம், தன் பெயர் பார்த்தசாரதி என்றும், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் என்றும், அறிமுகம் செய்து கொண்டார்.
'கோவை கலெக்டர் அலுவலகத்தில், குறைந்த விலையில் இரும்புக் கம்பி, சிமென்ட் உங்களுக்கு தேவையான அளவு வாங்கித் தருகிறேன்' எனக் கூறினார். தண்டபாணியின் மொபைல் எண்ணைப் பெற்று, ஒரே நாளில் பலமுறை தொடர்பு கொண்டு பேசினார். அவர் சொல்வதை நம்பிய தண்டபாணி, தாயார் மற்றும் மூவருடன், காரில் கோவை புறப்பட்டார்.
வரும் வழியிலேயே, இரண்டு முறை போன் அழைப்பு வந்தது. 'சீக்கிரம் வந்தால் பரவாயில்லை... கலெக்டர் மீட்டிங் இருக்கிறது; அதிகாரிகள் போய் விடுவர்' என்றார், கம்பிக்கு ஏற்பாடு செய்த, 'அதிகாரி!' காரை வேகப்படுத்தி, கோவை கலெக்டர் அலுவலகம் வந்து சேர்ந்தனர், தண்டபாணி தரப்பினர்.
அவர்களிடம், 'நேரமாகி விட்டது. சீக்கிரம் வாங்க, பில் போடணும்' என, அவசரம் காட்டிய, 'அதிகாரி,' அருகில் இருந்த உதவியாளரிடம், 'உடனே பில் போட்டு வா' என்று உத்தரவு போட்டார். 'பணம் கொடுத்தால் தான், பில் போடுவர்' என்று, தலையை சொறிந்தார் உதவியாளர். பணப்பை வைத்திருந்த நல்லம்மாள் தயங்கியதும், 'நேரமாகிறதே...' எனக் கூறினார், 'அதிகாரி!'
தண்டபாணி, தாயிடம் இருந்த பணப்பையை வாங்கி, 'ஆறு லட்சம் இருக்கிறது. அத்தனைக்கும் கம்பி, சிமென்ட் வேண்டும்' என்று கூறி, 'அதிகாரி'யிடம் கொடுத்தார். அதை அப்படியே, உதவியாளரிடம் கொடுத்தவர், 'தண்டபாணி என்ற பெயரில் பில் போடணும்; சீக்கீரம்...' என்று கூறி, அனுப்பி வைத்தார்.
பணப்பையை வாங்கிய உதவியாளர், கலெக்டர் அலுவலகத்தில், 'பிரஸ் ரூம்' அருகேயுள்ள வழியே, மாடிக்குப் போனார்.
அப்போது தண்டபாணியிடம் பேச்சு கொடுத்த அவர், ''குடோன் இங்கே தான் இருக்கிறது. கம்பி, நல்லதாக பார்த்து நீங்களே எடுத்துக் கொள்ளலாம். எனக்கு தர வேண்டியதை கொடுத்து விடுங்கள். அசிஸ்டென்டுக்கும் ஏதாவது பார்த்து கொடுங்கள்' என்று கூற, 'கட்டாயம் செய்கிறோம்' என்றனர், தாயும், மகனும்.
அதற்குள் இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டன. 'நேரம் ஆகிறதே... நான் போய் பார்க்கிறேன்' என்று கூறிய 'அதிகாரி,' உதவியாளர் சென்ற வழியாகவே, மாடிக்கு சென்றார். தாயும், மகனும், அதே இடத்தில் காத்திருந்தனர். பத்து நிமிடங்களுக்கு மேலாகியும், மாடிக்கு போன இருவரும் வரவில்லை; இருவருக்கும் பயம் தொற்றிக் கொண்டது.
அவசரம் அவசரமாக, மாடிப்படிகளை கடந்து மேல் தளங்களுக்கு சென்றனர். 'கம்பி, சிமென்டுக்கு, எங்கே பில் போடுவர்?' என, வழியில் தென்பட்ட அனைவரிடமும் விசாரித்தனர். நேரம் செல்லச் செல்ல, தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பது புரிந்த வினாடி, நல்லம்மாள் கதறியழ ஆரம்பித்தார். அங்குமிங்கும் ஓடிய மகன் தண்டபாணி, எதிர்ப்பட்ட சிலரிடம் விஷயத்தை கூறினார்.
கலெக்டர் அலுவலகமே அதிர்ந்தது. கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை அடைத்து, வெளியில் செல்லும் அனைவரையும் சோதனை செய்யத் தொடங்கினர், போலீசார். ஒவ்வொரு அலுவலகமாக தேடியும், பணம் வாங்கிச் சென்ற 'அதிகாரி'யும் கிடைக்கவில்லை; உதவியாளரும் பிடிபடவில்லை.
தாய், மகனை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்துச் சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார், குற்ற ஆவணக் காப்பகத்தில் இருக்கும் பழைய குற்றவாளிகளின் படங்களை காட்டியும், மாநகர சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை காட்டியும், விசாரித்து வருகின்றனர். அதிகாரியாக நடித்து ஏமாற்றிய மோசடிப் பேர்வழி பேசிய மொபைல் எண் மூலம் துப்பு துலக்கும் முயற்சியையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
1 hour(s) ago | 3
4 hour(s) ago | 31