| ADDED : செப் 10, 2011 03:33 AM
கோவை:உக்கடம்- செல்வபுரம் பைபாஸ் ரோட்டில்,ஷேர் ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலியானார். 20 பேர் லேசான காயமடைந்தனர்.கோவையில் பயணிகள் போக்குவரத்துக்கு பஸ்,மினி பஸ், ஆட்டோவைத் தொடர்ந்து சமீபகாலமாக ஷேர் ஆட்டோக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதில் ஷேர் ஆட்டோக்களில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்றப்படுகின்றனர். சில நேரங்களில் படிகளில் தொங்கியபடியும் பயணிக்கின்றனர்.ஷேர் ஆட்டோக்கள் கூடுதல் வேகத்தில் செல்வதால் திருப்பங்களில் கவிழ்கின்றன. நேற்று முன்தினம் மாதம்பட்டி பகுதியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பலர் காயமடைந்தனர்.இச்சூழலில்,நேற்று காலை செல்வபுரம் எல். ஐ.சி.,காலனியில் இருந்து டவுன்ஹால் நோக்கி வந்த ஷேர் ஆட்டோ, திடீரென உக்கடம் - செல்வபுரம் பைபாஸ் ரோடு திருப்பத்தில் கவிழ்ந்தது. விபத்தில், படியில் நின்று பயணம் செய்த முகமது பாரூக்(17) என்பவர் தலை, முகத்தில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோவில் இருந்த 20 பேர் லேசான காயத்துடன் தப்பினர். செல்வபுரம்போலீசார் விசாரிக்கின்றனர்.