சென்னை : சென்னை - பெங்களூரு சாலையை இணைக்கும், முக்கிய சாலையான என்.எச்., 46ல், அத்திமரத்துப்பள்ளம் என்ற இடத்தில் அமைந்துள்ள, மூன்று,'எஸ்' வளைவுகள், மனித உயிர்களுக்கு எமன்களாக உள்ளன. 2004ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில், இந்த, 'எஸ்' வளைவுகளில், 160 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல், தற்போது வெளியாகியுள்ளது.தமிழகத்தின், பிரதான சாலைகளில் பெரும்பாலானவை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டிருந்தாலும், சாலை நெடுகிலும் குறுக்கிடும் ஆபத்தான வளைவுகள், தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த வகையில், தேசிய நெடுஞ்சாலை எண் 46ல், அத்திமரத்துப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள மூன்று ஆபத்தான வளைவுகள், தொடர்ந்து விபத்துகளை ஏற்படுத்தி, ஏராளமானோரை எமனுலகத்திற்கு அனுப்பி வருகின்றன. கிருஷ்ணகிரி - ராணிப்பேட்டையை இணைக்கும், தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.46), 132 கி.மீ., தூரம் கொண்டது. இது, சென்னை - பெங்களூரு சாலையின், பிரதான இணைப்புச் சாலை. இச்சாலையில், கிருஷ்ணகிரியில் இருந்து வாணியம்பாடி வரையிலான, 22 கி.மீ., தூரத்தில், அத்திமரத்துப்பள்ளம் என்ற இடத்தில், அடுத்தடுத்து மூன்று, 'எஸ்' வளைவுகள் உள்ளன. இந்த வளைவுகளில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், அவற்றை சீர் செய்து, சாலையை நேராக்க வேண்டும் என்று, தொடர்ந்து அப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், கடந்த ஆட்சியில், இப்பிரச்னை கண்டு கொள்ளப்படவில்லை.இதையடுத்து, அப்பகுதி மக்கள், கோர்ட் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காண விரும்பி, சென்னையிலுள்ள வழக்கறிஞர் பிரேம் ஆனந்தனை அணுகினர். இதையடுத்து, குறிப்பிட்ட மூன்று, 'எஸ்' வளைவுகளில், 2004ம் ஆண்டு முதல், தற்போது வரை, எத்தனை விபத்துகள் நடந்துள்ளன; அவற்றில், எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்; எத்தனை பேர் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தருமாறு, கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தகவல் கேட்கப்பட்டது. இதில், அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்தன.கடந்த 2004ம் ஆண்டு முதல், இந்த ஆண்டு ஜூலை மாத இறுதி வரை, 'எஸ்' வளைவுகளில் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி, 160 பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 144; பெண்கள் 11; குழந்தைகள் 5. மொத்தம், 963 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 804; பெண்கள் 137; குழந்தைகள் 22.இது குறித்து, வழக்கறிஞர் பிரேம் ஆனந்தன் கூறுகையில், 'கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக, இப்பிரச்னை குறித்து, அப்பகுதி பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர். இருப்பினும், அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால், இன்று வரை தொடர்ந்து பலர் உயிரிழந்து வருகின்றனர். விலைமதிப்பற்ற உயிர்களை மேலும் இழக்காமல், பொதுமக்களை விபத்தில் இருந்து காக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். சாலை மேம்பாட்டு பணிகளின் போது, இதுபோன்ற ஆபத்தான 'எஸ்' வளைவுகளை அகற்றி, சீரான சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று, அத்திமரத்துப்பள்ளம் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.