உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்கழி வழிபாடு

மார்கழி வழிபாடு

திருப்பாவை - பாடல் 9

துாமணி மாடத்து சுற்றும் விளக்கெரியதுாபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்றுநாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்பொருள்: பிரகாசமான நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில், சுற்றிச் சூழ விளக்கெரிய, நறுமண திரவியம் மணம் வீச, அழகிய பஞ்சு மெத்தையில் உறங்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு மணிக்கதவைத் திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளை நீ எழுப்பு. உன் மகளை எத்தனை நேரமாக நாங்கள் கூவி அழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள் ஊமையா? செவிடா? சோம்பல் அவளை ஆட்கொண்டு விட்டதா? அல்லது எழ முடியாதபடி ஏதாவது மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழு. எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன், மாதவத்துக்கு சொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம் அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்.

திருவெம்பாவை - பாடல் 9

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்அன்னவரே எம் கணவர் ஆவார்அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்பொருள்: கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம் என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை